இதய துடிப்பை நிறுத்தி வைத்து அறுவைசிகிச்சை

  • Dr.Bashi V.Velayudhan
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
இதய துடிப்பை நிறுத்தி வைத்து அறுவைசிகிச்சை

சென்னையில் இயங்கி வரும் மியாட் மருத்துவனையில், ஆப்பிரிக்காவைச் சார்ந்த இளம்பெண் ஒருவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றினை, ஆறு மணி நேரத்தில் மேற்கொண்டு, உலக சாதனை படைத்துள்ளது.

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ருவாண்டாவைச் சார்ந்தவர் ஊமிவானா கிறிஸ்டீன். இருபத்தியோரு வயதான இந்த இளம் பெண்,  மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றால் அவதி பட்டு வந்தார். இதற்காக சென்னையில் செயல்பட்டு வரும் மியாட் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.  அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி, தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இது குறித்து இவருக்கு சிகிச்சையளித்த மியாட் மருத்துவமனை டொக்டர் வி. வி. பாஷியை தொடர்பு கொண்டு விளக்கம் தருமாறு வேண்ட, அவர் www.medicalonline.in க்கு அளித்த விளக்கம் இதோ...

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி,  ஊமிவானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். அவரை இம்மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவைச்சேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.  அப்போது, இதயத்திலிருந்து மூளை, வயிறு, குடல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் முக்கிய பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தகுழாய், நான்கு பாகங்களிலும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தோம். அதனுடன் இதயத்தில் உள்ள இரண்டு ரத்த குழல்களில் ரத்தக்கசிவு இருப்பதையும் தெரிந்துகொண்டோம். இதனால் அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்குழாயின் அனைத்துப் பகுதியினையும்  மற்றும் பழுதான இரண்டு இரத்த குழல்களையும் மாற்றியமைத்து சீராக்குவதென முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சையினை மூன்று கட்டங்களாக செய்யவும் திட்டமிடப்பட்டது. அறுவை சிகிச்சை குழுவில் நானும், மருத்துவர் முரளி, மருத்துவர் சிவக்குமார் மற்றும் உதவியாளர்களுடன் ஈடுபட்டோம்.

மிகவும் ஆபத்தான பகுதியான மகாதமணியின் முதல் இரண்டு பகுதிகள் மற்றும் பழுதடைந்த இரண்டு ரத்தக்குழல்களை ( அயோடிக் வால்வு, மிட்ரல் வால்வு) மாற்றியமைப்பது ஆகியவற்றை முதற்கட்டமாகவும், மார்புப் பகுதியில் உள்ள மகாதமனி ரத்தக்குழாயை சீர் படுத்துவது  இரண்டாவது கட்டமாகவும், மூன்றாவது கட்டமாக வயிற்றுப்பகுதியில் உள்ள ரத்தக்குழாயை சரி செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி முதல்கட்ட அறுவைசிகிச்சை நடைபெறும் சமயத்தில் நோயாளியின் இதயதுடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் சுமார் முப்பது நிமிடம் நிறுத்தப்பட்டது. செயற்கைக் கருவி மூலம் சுவாசத்தையும், உடலின் மற்ற இயக்கங்களையும் செயல்பட வைத்தோம். இந்த அறுவை சிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்றது. பின்னர் ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சையும், ஐந்து தினங்களுக்கு பின் மூன்றாம் கட்ட அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் கட்ட அறுவை சிகிச்சையின்போது ஏ. எஸ்.டி எனும் நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்குழாய் தமணியின் நான்கு பகுதிகளும்  சீராக்கப்பட்டிருப்பது உலகத்தில் இது தான் முதல்முறை.

ஒரு காலகட்டத்தில் அதாவது முப்பதாண்டுகளுக்கு முன் நம் தெற்காசியாவில் யாருக்காவது சிக்கலான உடற்பாதிப்பு என்றால் வெளிநாட்டை சார்ந்த மருத்துவமனைகளையோ அல்லது வெளிநாட்டு மருத்துவர்களையோத்தான் அணுகுவார்கள். அல்லது பரிந்துரைப்பார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் சிகிச்சை பெற இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்து வருகிறது.

இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையினை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாட்டில் மேற்கொண்டால் இந்திய மதிப்பில் எழுபது லட்ச ரூபாய் செலவாகியிருக்கும். ஆனால் எங்கள் மியாட் மருத்துவமனையில் இதற்கு நாங்கள் இந்திய மதிப்பில் ஒன்பது லட்ச ரூபாயினை தான் கட்டணமாகப் பெற்றோம்" என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக உலக நோயாளிகளின் பார்வை சென்னை மீது பதிந்துள்ளது. இங்குள்ள மருத்துவமனைகளும் சர்வதேச தரத்தில் செயல்பட்டு வருகின்றன என்பதற்கு இதுபோன்ற மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தான் சாட்சி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 0091 44 22492288