சரும விசயத்தில் கவனம் தேவை

  • Dr.Kaleeswaran
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
சரும விசயத்தில் கவனம் தேவை

“இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒருவருக்கு அம்மை ஏற்பட்டுவிட்டால், தெய்வத்துடன் தொடர்புடைய நோய் என்று வீட்டிலேயே வைத்தியம் செய்துவிடுகிறார்கள். இது சரியா, தவறா என்பதை விட, அவருக்கு வந்திருப்பது அம்மைதானா என்பதை முதலில் தோல் மருத்துவரிடம் உறுதிசெய்து கொள்ளவேண்டும். ஏனென்றால், அம்மை நோய் போலவே தோன்றக்கூடிய வேறு நோய்களும் (அழற்சி, நீர்க்கொப்பளங்கள்) உண்டு. ஒரு வேளை அவற்றுள் ஒன்று பீடித்திருந்தால் பாரதூரமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரும்.

“முகப்பரு என்பது நாம் நினைப்பது போல் சூட்டினாலோ, வியர்வையினாலோ மட்டும் வருவதல்ல. அது ஹார்மோன் மாற்றங்களால் குறிப்பிட்ட வயதில் வருவது. பொதுவாக 13 முதல் 25, 30 வயதுவரை இந்தப் பருக்கள் தோன்றும். மிகச் சிலருக்கு நாற்பது வயதிலும் தோன்றக்கூடும்.

ஆனால், இவை அனைத்துமே ஹார்மோன்களின் எதிர்விளைவு தான். ஆனால் இதற்கு சுயமாகச் செய்துகொள்ளும் சில விரும்பத்தகாத சிகிச்சைகள், மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என்று எச்சரிக்கிறார் 15 வருட அனுபவமிக்க டாக்டர் காளீஸ்வரன், திண்டுக்கல் ஏவிஎம் ஸ்கின்கேர் மற்றும் மதுரை தோல் - லேசர் சிகிச்சை மருத்துவமனையின் நிர்வாகி, சரும நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்.

முகப்பரு, கொழுப்பு நீக்கும் சிகிச்சை மற்றும் தலைமுடி உதிர்வது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நமது வாசகர்களுக்காகத் தருகிறார் டாக்டர் காளீஸ்வரன்.

முகப்பரு


“ஹார்மோன் மாற்றங்கள் தவிர எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பது, சில வகை பாக்டீரியாக்கள் என்பவற்றாலும் முகப்பரு ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் பருக்கள் தோன்றினால் என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பன பற்றி மக்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

“ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். நாம் உண்ணும் உணவுக்கும் பருக்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் சீஸ் போன்ற பால் பொருட்கள் மற்றும் சாக்லேட் என்பவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.

“பருக்கள் சருமத்தின் கோளாறு. அவற்றுக்கு முறையான மருத்துவம் செய்வது அவசியம். அதைவிட்டுவிட்டு பருக்களை நகங்களால் கிள்ளியோ, உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் சுய மருத்துவம் செய்து கொள்வதோ முகத்தை விகாரமாக்கி விடும். “முகப்பருக்களுக்கு மருத்துவ ரீதியான சிகிச்சை இருப்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. இந்த சிகிச்சை பருக்களை குணப்படுத்துவது மட்டுமன்றி, பருக்களினால் ஏற்படக்கூடிய தழும்புகள் என்பவற்றையும் நீக்கி, முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.

“பருக்கள் வருவதற்குக் காரணிகள் வேறுபடுவதைப் போலவே, சருமத்தின் வகையைப் பொறுத்து பருக்களுக்கான சிகிச்சைகளும் வேறுபடும். பருக்களைப் பெரும்பாலும் ஆயின்மென்ட்டுகள் மூலமாகவே விரட்டிவிடலாம். ஆனால், ஆயின்மென்ட்டுகளை தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களுக்கு அப்பாலும் பயன்படுத்தவேண்டி வரும். ஒவ்வொரு வகையான சருமத்துக்கும் ஒவ்வொரு வகையான ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. எனவே, சருமத்துக்கு ஒவ்வாத ஒரு ஆயின் மென்டைப் பயன்படுத்தினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். அளவுக்கு அதிகமாகப் பருக்கள் இருந்தால் சில மாதங்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

“இவற்றைத் தாண்டி, முகப் பருக்களுக்கான அதிநவீன சிகிச்சையாக இப்போது லேசர் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பருக்களையும், பருக்களினால் ஏற்பட்ட குழிகள், தழும்புகளையும் சரி செய்யலாம். சுமார் இரண்டு மாத காலத்துக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, நான்கு அல்லது ஐந்து தடவை என்ற கணக்கில் லேசர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உங்கள் முக அழகைக் கெடுக்கும் பிரச்சினையை சரிசெய்ய முடியும்.

“சிலருக்கு பருக்கள் தவிர, அம்மைத் தழும்பு மற்றும் அறுவை சிகிச்சைகளின் பின் ஏற்படக்கூடிய தழும்புகள் அசௌகரியத்தைத் தரும். இவற்றுக்கு லேசர் சிகிச்சைகள் மூலம் நிரந்தரமான குணத்தை அளிக்க முடியும்.

கொழுப்பு நீக்கும் சிகிச்சை

“உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் இது அசௌகரியத்தை தரும். இந்தக் கொழுப்பை அகற்றுவதற்கு ‘கிரையோலைபோலைஸ்’ எனும் சிகிச்சை அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றது. இவற்றை ஒரு மணிநேரம் அளவுக்கு எடுத்துக் கொண்டால், வயிறு, இடுப்பு, தொடை போன்ற உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் கொழுப்பைக் குறைக்க முடியும்.

இதன்போது, உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை - 8 முதல் - 10 டிகிரி வரை கொண்டு சென்று உறைய வைத்து பின்னர் கரைக்கிறோம். இதன் விளைவுகளை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கு சுமார் 2 முதல் 3 மாதங்கள் ஆகலாம். ஆனால் இந்த சிகிச்சை மூலம் உடல் எடை குறையாது. சிகிச்சை செய்த பகுதியில் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து விடும்.

“இதுபோன்ற சிகிச்சைகளை ஒரு அளவுக்கு மேல் பருமனாக இருப்பவர்களுக்குச் செய்வது சிரமம். அப்படியானவர்கள் சில ஆரம்பக்கட்ட கொழுப்பு கரைப்பு சிகிச்சைகளைச் செய்த பின்னரே கிரையோலைபோலைஸ் சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

முடி உதிர்வு


“கட்டாய ஹெல்மெட் சட்டம் வந்ததும் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்று பலரும் புலம்பு கிறார்கள். சரியான ஹெல்மெட்டைத் தேர்வு செய்து அணிந்து கொண்டால் தலைக்கும், தலை முடிக்கும் பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும்.

“முடி உதிர்வுக்கு ஹெல்மெட் அணிவதே காரணம் என்பதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் உண்டு. அவை, ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடும். நாளொன்றுக்கு 50 முதல் 100 முடி உதிர்வது சாதாரணமானது. இதற்கு மேல் முடி உதிர்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காய்ச்சல், அறுவை சிகிச்சை, மன அழுத்தம், வைட்டமின் குறைபாடு என்பவற்றால் முடி உதிரலாம். இதை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதுடன், தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் சில திரவங்களைத் தடவுவதன் மூலம் சரிசெய்யலாம்.

“முடி உதிர்வதன் உச்சக்கட்டம் வழுக்கை. முன்புறத்தில், பின்புறத்தில், பக்கவாட்டின், நடுவில் என்று வழுக்கைகள் வெவ்வேறு வகைப்படும். வழுக்கையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் வழுக்கையைத் தவிர்க்கலாம். ஆனால், இந்த சிகிச்சையை சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

“சிலருக்கு உடலில் தேவையில்லாத இடங்களில் முடி முளைக்கும். முக்கியமாகப் பெண்களுக்கு! இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கிரீம் மற்றும் ரேசர் மூலம் அவற்றை அகற்றுவார்கள். ஆனால் இதற்கு லேசர் சிகிச்சை கைகொடுக்கும். மாதத்திற்கு ஒரு முறை, ஐந்து அல்லது ஆறுமுறை செய்துகொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் உள்ள எந்த பாகத்திலும் (புருவம் தவிர்த்து) உள்ள தேவையற்ற முடியை லேசர் சிகிச்சையின் மூலம் தீர்க்க முடியும்.

திருமணம் மற்றும் பல சுப நிகழ்ச்சிகளுக்காகவும் தோலில் / முகத்தில் எந்த பிரச்சனையும் இல்லாதவர்களுக்கும் முகப்பொலி வைக் கூட்ட பலவித அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றார்கள். லேசர் டோனிங் இவர்களுக்கு நல்ல பயனளிக்கும். முகப்பரு, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் மருத்துவமல்லாத அழகு சிகிச்சைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல் மருத்துவத்தில் செய்யப்படும் லேசர் டோனிங் நல்ல பலனைத் தருவதோடு பாதுகாப்பான சிகிச்சையும் ஆகும்.