அதிக உடற்பருமனும் அதற்கான தீர்வுகளும்!

  • Dr.R.V.Jayabalaji
  • Jan 08, 2018
Appointment                Doctor Opinion          
 
அதிக உடற்பருமனும் அதற்கான தீர்வுகளும்!

"ஒபேசிட்டி’’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற அதிக உடல் பருமனானது, அதிகமான கொழுப்பு உடலில் சேர்ந்து அதன் காரணமாக உடல்நலத்தில் ஏற்படுகின்ற எதிர்மறை விளைவுகளைப் பற்றிய ஒரு மருத்துவ நிலையாகும்”. 

பாடிமாஸ் இன்டெக்ஸ் (BMI) எனப்படும் அளவுக்கோலின்படி உடல் எடை கூடியிருக்கும் போது ஒருவர் “அதிக உடல்பருமன் கொண்டவர்” என முடிவு செய்யப்படுகின்றது. அதிக உடல் பருமனானது, உடலில் பல்வேறு நோய்கள் உருவாவதற்கு அடிப்படை காரணமாக விளங்குவதோடு மன உளைச்சலையும் பாதிக்கப்படுபவருக்கு தருவதாக இருக்கின்றது என்று அதிக உடல்பருமன் பற்றியதான பொதுவான விபரங்களை எமக்கு வழங்கியதோடு, இது தொடர்பான கூடுதல் விபரங்களையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகளுக்கான உடல் பருமன் சிகிச்சைத்துறை மருத்துவர் டாக்டர் ஜெயபாலாஜி.

உடல் பருமன் சாதாரணமாக என்னென்ன காரணங்களால் ஏற்படுகின்றது என்பதை விளக்குங்களேன்?

உடல் பருமன் என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுவதாகும். அவற்றில் முக்கியமான காரணங்களாக, அதிகபடியான உணவு எடுத்துக் கொள்ளுதல், உடல் அசைவுகளை ஏற்படுத்தும் நிலையை முழுவதுமாக புறக்கணித்து ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்திருத்தல், உடல்பயிற்சி எதுவுமே செய்யாது இருத்தல், நடைப்பயிற்சிக்கு சந்தர்ப்பமே அளிக்காது இருத்தல் முதலியவற்றை சொல்லலாம். அத்துடன் மரபியல் அடிப்படையிலான காரணங்களை முன்னிட்டும் உடல்பருமன் பிரச்சினை உருவாகின்றது. 

மேலும் இன்றைய காலகட்டத்தில், தவறான வாழ்க்கை முறை அதாவது ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கங்கள், அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், இனிப்பு வகைகள், சாக்லெட்டுகள், கேக், பீஸா போன்ற துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளுதல், மதிய நேரங்களில் வழமையாக தூக்கம் கொள்வது போன்ற இதர காரணங்களாலும் உடல்பருமன் ஒருவருக்கு உண்டாகின்றது.

அதிகப்படியான உடல் பருமன் காரணமாக ஒருவருக்கு ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் என்னென்ன?

அதிக உடல் பருமனானது, இருதய நோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய், தூக்கமின்மை, சில வகைப்பட்ட புற்று நோய்கள், கீழ்வாதம், மன அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கி விடுகின்றது. இதைத் தவிரவும் சில நிகழ்வுகளில், உடல் பருமன் அதிகம் கொண்டோருக்கு ரத்தக் கொதிப்பு, மூளைசம்பந்தப்பட்ட நோய்கள், பக்கவாதம், மலட்டுத்தன்மை ஆகிய நோய்களும் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உடல் பருமனை குறைப்பதற்கு நவீன மருத்துவமுறைகள்..

சாதாரண மருத்துவ அணுகுமுறைகளான உணவு மாற்றம், மருந்துகள், உடற்பயிற்சிகள் ஆகியவை நோயாளர்களுக்கு சரியான பலனை தராதபோது சில விசேஷ மருத்துவ முறைகளும் உடல் எடையை குறைப்பதற்கு கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் கேஸ்டிரிக் பலூன் அல்லது அறுவை சிகிச்சை முறையாகும். இந்த முறையின் மூலமாக வயிற்றின் அளவை அறுவைச் சிகிச்சையின் மூலமாக குறைத்துக்கொள்ள முடியும் அல்லது குடலின் நீளத்தை அறுவைச் சிகிச்சையின் மூலமாக வேண்டிய அளவில் சிறிதாக்கி கொள்ள முடியும். இதனால் நோயாளர் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் மிகப்பெரிய அளவில் குறைக்கப்படுகின்றது. 

இந்த தருணத்தில் தெரிவிக்கப்பட வேண்டியது என்னவென்றால், உலகம் முழுவதிலும் உள்ள உடல்பருமன் உடையோர், பெரியோரும் குழந்தைகளும் அதிநவீன சிகிச்சைகளின் மூலமாக அபாய கட்டத்திலிருந்து காப்பாற்றப்படுவதோடு இறப்பிலிருந்தும் மீட்கப்பட்டு வருகின்றார்கள் என்பதுதான் உண்மை. இது அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வின் மூலமாக அறியப்பட்டுள்ளது.

உடல் பருமன் பிரச்சினையை, பாதிப்புக்குள்ளானவர்கள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்?

உடல் பருமன் பிரச்சினையை, பெரும்பாலும் கூட்டு நடவடிக்கைகளான சமூக மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் முதலியவற்றை கையாண்டு குணப்படுத்திக்கொள்ள முடியும். இவற்றில் முதல் படியாக உணவுபழக்கத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது மற்றும் தினமும் செய்யக்கூடிய சாதாரணமான உடல் பயிற்சிகளையும் தவறாது மேற்கொண்டு வர வேண்டும். உடல்பருமன் பிரச்சினை உள்ளவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவையும், கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவையும் குறைத்துக்கொண்டு நார்ச்சத்து அதிகமுள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது அன்றாட உணவு முறையில், 50% விதத்திற்கு மேலாக காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பாக பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் என்றும் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உணவில் 25 சதவீதம் தானியங்கள் மற்றும் 25 சதவிதம் புரதச்சத்துள்ள பருப்பு வகைகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள பச்சை காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது போன்ற நடவடிக்கைகளால் அதிகப்படியான உடல் எடையை படிப்படியாகவும் முறையாகவும் குறைத்துக் கொள்ளலாம். இதுவே முறையான தீர்வாக அமைந்திடும். தற்போது பல இடங்களில் உள்ள உடல் பருமன் குறைப்பு சிகிச்சை மையங்களில் வழங்கப்படும் சிகிச்சைகளில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கவே செய்கின்றது. ஆகவே இதற்காகவே உள்ள பயிற்சிப்பெற்ற சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று உரிய சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

தற்போது மதுரையில் வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கு தனியாகவும் பெரியவர்களுக்கென தனியாகவும் அதீத உடல் பருமன் குறைப்பு சிகிச்சை துறை இயங்கி வருகின்றது. இங்கு இதற்கான சிறப்பு மருத்துவர்களும் செயல்பட்டு வருகின்றார்கள். இந்த சிறப்பு மருத்துவர்கள் உடல் பருமன் நோயாளர்களின் சிகிச்சைக்கு முன்பாக அவர்களின் உடல்நிலை பற்றியதான முழுமையான விபரங்களை அறிந்துகொண்ட பின்பே சிகிச்சையை மேற்கொள்வதால் இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வுகள் காணப்படுகின்றது.