இளவயதினரையும் தாக்கும் மூட்டு வலிகள்

  • Dr.Raja Pandian
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
இளவயதினரையும் தாக்கும் மூட்டு வலிகள்

முந்தைய காலங்களில் ஏறக் குறைய அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே மூட்டுவலி வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்றோ, முப்பத்தைந்து வயதிலேயே மூட்டு வலியால் அவதிப்படுவோரைப் பரவலாகப் பார்க்கிறோம். இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? இதை வருமுன் காக்கும் நடைமுறைகள் எவை? வந்தபின் இதைச் சரி செய்வது எப்படி? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுடன், மதுரையில் இயங்கிவரும் அப்பலோ மருத்துவமனையின் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை நிபுணர் Dr. கே.ராஜ பாண்டியனைச் சந்தித்தோம். இவர், முள்ளந்தண்டு குறித்த சிறப்புப் படிப்பை ஜெர்மனியிலும் மூட்டு அறுவை சிகிச்சைக்கான படிப்பை கொரியாவிலும் முடித்தவர்.

*முதலில், இளம் தலை முறையினரும் இப்போது மூட்டு வலியால் அவதிப்படுவதற்குக் காரணம் என்ன? அதைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றிக் கூறுங்களேன்?

பதில்: இன்றைய இளைஞர்களின் உடல் இயக்கத்தை பொறுத்தே அவர்களுக்கு மூட்டு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இன்றைய இளைஞர்களில் பெருவாரியானோர் கணினி சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுகின்றார்கள். மேலும், அவர்களது பணியைக் குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பணியாற்றுகிறார்கள். மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இளைஞர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இப்படியாக அன்றாட வாழ்க்கையில் உடல் இயக்கம், கை, கால் அசைவு என்பன கடுமையாகக் குறைந்து விட்டன.

மூட்டு என்பது மிக முக்கியமான உறுப்பு. மனித உடலுக்கு ஆதாரமானது. என்றாலும், அதைப் போதுமான அளவு பயன்படுத்தாமல் விட்டுவிடுவதால் மூட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள ‘கார்ட்டிலேஜ்’ எனப்படும் ஒரு கெட்டித் திரவமானது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடுகிறது. இதனாலேயே, சாதாரணமாக அறுபது, எழுபது வயதுகளில் உடல் இயக்கம் குறைவதால் உண்டாகும் மூட்டுவலியானது இன்றைய இளம் தலைமுறையை வெகுவாகப் பாதிப்பதற்கான முக்கிய காரணம்.

அடுத்தது உடல் எடை. இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் - முக்கியமாக பெண்கள் - தமது மன இறுக்கத்தைப் போக்கவும் தமக்கு மிஞ்சும் கொஞ்ச நஞ்ச நேரத்தையாவது தனக்குப் பிடித்த மாதிரி செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் துரித உணவகங்களை நாடத் தொடங்கிவிட்டார்கள். இங்கு சிவப்பு இறைச்சி போன்ற அதீத புரோட்டீன் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதால் யூரிக் அசிட் குளறுபடிகளை உருவாக்கி, இளம் வயதிலேயே ஆர்த்ரைட்டிஸ் போன்ற நோய்கள் உண்டாகக் காரணமாகிவிடுகிறது.

அடுத்து, மது மற்றும் புகைப் பழக்கம். முக்கியமாக, புகைத்தலினால் மூட்டுகளுக்குச் செல்லும் சிறு சிறுநாளங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதன் விளைவாக, மூட்டுகளைச் சுற்றிலும் உள்ள கார்ட்டிலேஜுக்குத் தேவையான போஷாக்குக் கிடைப்பதில்லை. இதனாலும் இளம் வயதினர் ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட மூட்டுப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு மூட்டு சார்ந்த பிரச்சினைகள் பற்றி அறிந்துகொள்ள சுமார் 55 வயதுக்கு மேற்பட்டவர்களே என்னிடம் வருவார்கள். ஆனால் இப்போது, 45, 40 என்று மூட்டு நோய்களால் தாக்கப்படுவோரின் வயது எல்லை குறைந்துகொண்டே வருகிறது.

*மூட்டு சார்ந்த நோய்கள் பல வற்றுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இது, எதன் அடிப்படையில், எந்த வயதின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகிறது?

பதில்: மூட்டு சார்ந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. மேலும், ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அதிலும் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பட்சத்தில், அவர்களால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாதிருக்கும் பட்சத்திலேயே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

முன்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட செயற்கை மூட்டுக்களின் ஆயுள் பத்து முதல் பதினைந்து வருடங்கள் மட்டுமே. இதனால், மூட்டு மாற்று சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவர்கள் கூட சுமார் அறுபத்தைந்து வயதுக்குமேலேயே இந்த சிகிச்சையைச் செய்துகொண்டார்கள். அதுவரையிலும் அவர்கள் வலியைத் தாங்கியபடி, வெளியே எங்கும் செல்லாமலேயே இருக்க வேண்டியிருந்தது. 70 வயது வரை துன்பத்தை அனுபவித்த பின் செயற்கை மூட்டைப் பொருத்திக் கொள்வதில் என்ன பயன்? ஆனால் இப்போது அப்படியில்லை. இப்போது உருவாக்கப்படும் செயற்கை மூட்டுக்கள் சுமார் 25 முதல் 30 வருடங்கள் வரை சீராக இயங்கக்கூடியன. இதனால் ஐம்பது வயதிலேயே செயற்கை மூட்டைப் பொருத்திக்கொள்ள முடிகிறது.

மேலும், நாளுக்கு நாள் முன்னேறி வரும் மருத்துவ உலகில், இன்னும் பத்து வருடங்களில் மூட்டு மாற்றில் பலவித முன்னேற்றங்கள் வந்திருக்கும். இதனால், செயற்கை மூட்டைப் பொருத்திக் கொண்ட இருபது வருடங்களுக்குப் பிறகு என்ன ஆகுமோ என்று அச்சப்படத் தேவையில்லை.

*நீங்கள் குறிப்பிடும் ஆர்த்ரைட்டிஸ் எனப்படுவது மரபணுக் கோளாறுகளால் வரக் கூடிய வியாதியா?

பதில்: இல்லை. மூட்டுக்களும் கார் டயர்களைப் போன்றனவே. பயன்படுத்தப் பயன்படுத்த, மூட்டுகளுக்கிடையே உள்ள சவ்வு முதலில் தேய்வடையும். அவை முற்றாக மறைந்ததும் எலும்பும் எலும்பும் உராய ஆரம்பிக்கும். இதன் போது நடக்க முடியாமலேயே போய்விடும். இதற்காக மூட்டுகளைப் பயன்படுத்தாமலே வைத்திருந்தால் ஏற்கனவே கூறிய பிரச்சினைகள் ஏற்படும். இந்தத் தேய்மானத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்து வந்தால், மூட்டு வியாதிகளைத் தள்ளிப்போட முடியும்.

ஆனால், ‘ருமட்டொய்ட் ஆர்த் ரைட்டிஸ்’ எனப்படும் நோய் மரபணு மூலம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் 35 - 40 வயதினரையே இது தாக்கும். ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம். ஆனால் பலரும் அதை அலட்சியம் செய்து விடுகிறார்கள். மூட்டைச் சுற்றியுள்ள சவ்வு முற்றாகக் கிழிந்தபின் அதைப் புதிதாக உருவாக்குவதற்கு மருந்துகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தால், மீதமிருக்கும் வாழ்நாளை சங்கடங்கள் இன்றிக் கழிக்கலாம்.

*மூட்டு மாற்று சிகிச்சைகளின் மிக அண்மைய முன்னேற்றமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

பதில்: இளம் வயதினருக்கு விளையாட்டு மற்றும் விபத்துக்கள் காரணமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், முழுமையாகவே மூட்டுக்களை மாற்றாமல், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டுமே மாற்றக்கூடிய சிகிச்சைகள் அறிமுகமாகியிருக்கின்றன. இதனால், இயற்கையான மூட்டின் பாதிப்பு, செலவு, அசௌகரியம் என்பன குறையும். முக்கியமாக, இயற்கையான ஒரு மூட்டின் இயக்கத்தை அவர்களால் உணர முடியும். இந்த சிகிச்சையைச் செய்து கொள்பவர்கள், மூன்றே மாதத்தில் கீழே சம்மணமிட்டு அமரவும் முடியும்.

*மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் என்னென்ன மாதிரியான நடைமுறைகளைக் கையாள வேண்டும்?

பதில்: இன்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் நாளையே எழுந்து நிற்கலாம். ஐந்து நாட்களின் பின் இயற்கை உபாதைகளை இயற்கையான முறையில் கழிக்கக்கூடிய அளவுக்கு அவர்கள் சகஜமாகி விடுவார்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை நாம் வழங்குவோம். மேலும், அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் இயன்முறை சிகிச்சைகள் எனப்படும் ‘பிஸியோதெரபி’ மூலமான வழிகாட்டுதல்களும் சுமார் ஒரு மாதத்துக்கு அவர்களுக்கு வழங்கப்படும். இவை, அவர்களது அன்றாட வாழ்க்கையை எளிதான முறையில் கொண்டு நடத்த மிகுந்த உதவியாக இருக்கும்.