பொதுவாக தாய் கருவுற்றதிலிருந்து 37 முதல் 40 வாரங்களுக்குள் குழந்தைகள் பிறக்கின்றன. இந்த 37 வாரத்திற்கு முன்னதாகப் பிறக்கும் குழந்தைகள் குறைமாத குழந்தைகளாகக் கருதப்படுகிறது. மிகவும் குறைந்த வயதிலேயே திருமணம் முடிப்பதாலோ அல்லது முப்பது வயதிற்கு மேல் மிகவும் தாமதமாக திருமணம் முடிப்பதாலும் குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன.
மேலும் திருமணமான பின்னரும் பல்வேறு காரணங்களுக்காக தற்போது குழந்தை பெறுவதை தள்ளிப் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாகவும் குறை மாத குழந்தைகள் பிறக்கின்றன. இது தவிர இயற்கையாக தாயின் உடல் நலத்தில் இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், பிரசவ கால சர்க்கரை நோய் போன்றவற்றாலும் குறை மாத குழந்தைகள் பிறக்கின்றன.
இது போன்று பல்வேறு காரணங்களால் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் பிறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது.
மருத்துவ வசதிகள் அதிகமில்லாத முன்பு இதுபோன்று பிறக்கும் குறைமாத குழந்தைகள் பெரும்பாலும் உயிர் பிழைப்பதில்லை. ஆனால் தற்போது பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துவ வசதிகள் காரணமாக குறைமாத குழந்தைகள் இறப்பு விகிதம் பெரிதும் குறைந்துள்ளது.
எப்படி குறைமாத குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதோ அதுபோன்று குறைமாத குழந்தைகளின் இறப்பு விகிதம் பெரிதும் குறைந்துள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் உடல் எடை குறைவாகவோ, மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவோ காணப்படலாம். மேலும் குறைமாத குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், மூளை ரத்தக்கசிவு, குடல் சிதைவு மற்றும் கிருமி தொற்று போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகம் காணப்படுகிறது. எனவே தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
குழந்தை ஆரோக்கியம டைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்ற பின்னரும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு (follow-up) மிகவும் அவசியமாகும். ஏனெனில் இதுபோன்று குறைமாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் விழித்திரை, செவித்திறன், மற்றும் கண் பார்வை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே முறையான மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.
தற்போதைய காலகட்டத்தில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது.
சரியான வயதில் திருமணம் செய்து குழந்தை பிறப்பை உறுதி செய்தல், கர்ப்பமடைந்த பின்னர் மகப்பேறு மருத்துவரிடம் முறையாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு, மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவற்றால் குறைமாத குழந்தைப் பிறப்பை தவிர்க்க முடியும்.