அழகுக் கவலைகள் - இனி வேண்டாம்

  • Dr.Hema Sathish
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
அழகுக் கவலைகள் - இனி வேண்டாம்

ஒரு தோல் நோய் மருத்துவரை எப்போது பார்க்கச் செல்கிறோம்? தோல் அரிப்பு, தடிப்பு, படை, தேமல், வெண் தோல், பாலுண்ணிகள், மரு, மங்கு போன்று ஏதேனும் ஒரு தோல் நோய் வரும் போது தான். இவர்கள் பொது தோல் நோய் மருத்துவர்கள் (General Dermatologist) என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தின் மதுரை நகரிலுள்ள தேவதாஸ் பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவர் ஹேமா சதீஷ் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தன்னை "அழகூட்டும் தோல் மருத்துவர்" (Cosmetic dermatologist) என்று கூறினார்.

தோல் மருத்துவத்தின் வளர்ந்து வரும் ஒரு புதிய கிளை மருத்துவம் இது என்கிறார் டொக்டர் ஹேமா சதீஷ். www.medicalonline.in க்கு அவர் அளித்த விசேட செவ்வியில் நாம் திரட்டிய தகவல்கள் இவை:

குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அழகுபடுத்திப் பார்க்கிறார்கள். இளவயதில் தங்களைத் தாங்களே அழகாக்கிக் கொள்வதில் இருபால் இளைஞர்களும் யுவதிகளும் அதிக அக்கறை கொள்கிறார்கள்.

திருமணச் சந்தை இன்று அழகு மருத்துவத்துக்கு ஒரு புதிய தேவையை உருவாக்கி உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. மத்திம வயதில் உள்ளவர்கள் கூட, தங்களை லட்சணமானவர்களாக வைத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருவது உண்மை.

ஒரு நிமிடம் நிற்க! அழகு நிலையம் நடத்தி வரும் அழகுக்கலை நிபுணர்களின் (Cosmetologist) பணியினை, இவர்களது (Cosmetic Dermatologist) மருத்துவப் பணியோடு நாம் குழப்பி விடக் கூடாது. இரண்டுக்குமான கல்வி முறையும், பயிற்சிகளும் வேறு வேறானவை.

அழகுக்கலை நிபுணர்கள் இருப்பதைச் செம்மைப்படுத்தி, உடல் அழகுக்குப் பொலிவு கூட்டுகிறார்கள். பத்துப் பேருக்கு மத்தியில் பளிச்செனத் தோற்றமளிக்கச் செய்து விடுகிறார்கள்.

ஆனால், மருத்துவர்களின் பணியோ வேறு விதமானது. இவர்கள் கல்வி கற்கும் காலம் நீண்டது, பயிற்சிக் காலமும் கடுமையானது. பாதிப்பின் தன்மையை அளவிட்டு, உடல் உள்ளுக்குள் குறைகளை ஆராய்ந்து, பரம்பரைத் தன்மையைக் கணக்கில் கொண்டு தீர்வு சொல்கிறார்கள். பாதிக்கப்பட்ட, சேதமான உடலின் அழகினை உயிர்ப்பிக்கும் மருத்துவப்பணி இது.

மருத்துவர் ஹேமா சதீஷ் அருமையான உதாரணம் தருகிறார். சிலருக்கு உதடுகள் குவிந்திருக்கும் பகுதி சற்றே கீழ் நோக்கி கவிழ்ந்திருக்கும். உதடுகள் கீழ் நோக்கி வளைந்திருந்தால், அவர்கள் கவலை மிக்க தோற்றத்தைக் கொண்டவர்களாகக் காட்டி விடும். ஒரு சிறு சிகிச்சை மூலம் இவர்களது உதடுகளின் குவிப்பகுதி சற்று மேல் நோக்கி இருக்குமாறு செய்து விடுகின்றனர்.  அட! என்ன ஆச்சர்யம்! முகம் மலர்ந்து சிரிக்கும் தோற்றத்தைக் கொண்டு வந்து விட்டனரே!          

இதேப் போல, சிலருக்கு மேல் உதடுகள் சற்றே சிறியதாக இருக்கும். இவர்கள் சிரிக்கும்போது ஈறுகள் எல்லாம் தெரியும். இவர்கள் முக அமைப்பை சற்றே சரி செய்ய வேண்டும். மேலுதடுகளின் தசைகளைத் தளர்த்தி, அவர்களையும் மென்மையாகச் சிரிக்க வைத்துவிட முடியுமென்கிறார் மருத்துவர். ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இதில் அறுவை சிகிச்சை எதுவும் இல்லையென்பதுதான். அதனால், உதட்டில் தளும்பு எதுவும் வரப் போவதுமில்லை.

உதடுகள் மிக மெலிந்து காணப்படுபவர்கள் முகம் எடுப்பாகத் தெரிவதில்லை. பிறவியிலேயே சிலருக்கு உதடுகளின் அமைப்பு சற்று மாறுபட்டு அமைந்திருக்கக் கூடும். சிலருக்கு, விபத்துக்களினால் இவ்விதம் நேரலாம். இத்தகைய குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி வர முடியும் என்கிறார் அவர்.

தான் சந்தித்த வேறு விதமான நோயாளி ஒருவர் பற்றிக் கூறுகிறார் மருத்துவர் ஹேமா. நாற்பது வயதைத் தாண்டி, பேரன் பேத்தி வந்துவிட்ட நிலையிலும், பொது இடங்களில் நிமிர்ந்து நிற்க முடியாமல், தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்வின் பெரும் பகுதியைக் கடந்து விட்டார் ஒரு பெண்மணி. அவருக்கு இருந்த பிரச்சினை முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளர்ந்ததுதான். அவரது பிரச்சினை தீர்க்கப்பட்டது. இப்போது அவரால் எல்லோரையும் போல சாதாரணமாக நடமாட முடிகிறது.

பெண்கள் பலருக்கு தேவையற்ற முடி வளர்ந்து தர்ம சங்கடம் தருகிறது. இந்நிலையில், அவற்றை லேசர் சிகிச்சை நீக்கி விட முடியும் என்று கூறுகிறார் மருத்துவர். மீண்டும், மீண்டும் வர வேண்டியதிருக்குமா என்ற நமது சந்தேகத்தை அவரிடம் கேட்டோம். சில முறை வர வேண்டியதிருக்கும் என்றார் அவர். ஆனால், உறுதியான பலன் இருக்கும் என்றார்.

வேறு விதமான பிரச்சினை ஒன்று பலரையும், பல வேளைகளில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுகிறது. இளம் பிராயத்தில் பருக்களால் வந்த வடு, பேறுகாலம் முடிந்த உடன் இளம் தாய்மார்களைப் பாதிக்கும் வயிற்றுச் சுருக்கம் போன்றவைதான் இப்பிரச்சினை. மேலும், விபரிதமான ஒரு பிரச்சினை ஒன்றையும் மருத்துவர் விவரித்தார். தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் ஊசி, பிளேடு போன்றவற்றால் உடலில் கீறிக் கொண்டவர்கள் பல வேளைகளில் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். ஆனால், அவர்கள் உடம்பில் செய்து கொண்ட காயங்களின் தழும்புகள், செய்த தவற்றின் நினைவுச் சின்னங்களாய் நின்று விடும். வாழ்நாள் முழுவதும் மன உறுத்தலைத் தந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் இவற்றை எளிதாக நீக்கிவிடும் சிகிச்சை முறைகள் வந்து விட்டன. இவர்களுக்கும் தழும்புகளை நீக்கி, குற்ற உணர்விலிருந்து விடுதலை அளிக்கிறோம் என்கிறார் மருத்துவர்.

தழும்புகள் முழுமையாக மறைந்து விடுகின்றனவா என்ற வினா எழுப்பினோம். சாதாரணமாகப் பார்க்கும்போது தெரியாத வண்ணம் செய்து விடுவோம் என்றார். கூர்ந்து நோக்கித் தேடினால் மட்டுமே தெரியும். அது போலவே, வெண்தோல் என்ற ஒரு கொடிய நோய் உண்டு. பார்ப்பவர்கள் மனதில் எதிரில் நிற்பவர் தொழுநோயாளியோ என்ற அச்சம் உண்டாகும். இந்த வெண் தோல் நோயையும் அறுவை சிகிச்சை மூலம் சாதாரணத் தோல் போலத் தோற்றம் அளிக்கும் தன்மைக்கு மாற்றி விடுகின்றனர்.

காதல் வயப்பட்டும், அரசியல் ஆன்மீக வெறியிலும் உடம்பில் பல இடங்களில் பச்சை குத்திக் கொண்ட சிலர், கால மாற்றத்தினால், பழயனவற்றை மறக்க முடியாமலும், பச்சை குத்தியதை மறைக்க முடியாமலும் அவதிப்படுவர். அவர்களுக்கும் சரீர, மன உபாதைகளிலிருந்து விடுதலை அளிக்க முடியும் என்ற நற்செய்தியைத் தெரிவிக்கிறார் மருத்துவர் ஹேமா.

தேவையற்ற கொழுப்பு உடம்பின் பல பகுதிகளில் சேர்ந்து, விகாரமான தோற்றம் உருவாகிவிட, காரணமாகி விடுவதுண்டு. இவர்கள் பொது இடங்களில் கேலிப் பேச்சுக்கு ஆளாக நேர்வதுண்டு. இதனைச் சரி செய்ய, அவர்கள் பல உடற்பயிற்சிகளும், நடைப் பயிற்சிகளும் மேற்கொள்வர். சாப்பிடாமல் இருந்து உடலைப் பலவீனப்படுத்திக் கொள்வர். உடல் இளைக்க அவர்கள் செய்யாத முயற்சிகளோ, தேடாத வழிகளோ இருக்காது எனலாம். இவர்களுக்கு வரப் பிரசாதமாக வந்திருப்பது லிப்போசக்ஷன் எனப்படும் சிகிச்சை முறை.

நடு வயதினைக் கடக்கும் ஆண்கள், பலரின் தீராத பிரச்சினை தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுதல். வயதான தோற்றத்தை அளித்து, கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் இவர்களுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை (hair transplant) தீர்வாகச் சொல்லப்படுகிறது. நட்ட இடத்தில் மீண்டும் முடி வளர்கிறது. ஆனால், இன்னமும் இது எளிதாகச் செய்து முடிக்கக் கூடிய சிகிச்சை முறை இல்லை என்று மருத்துவர் எச்சரிக்கை செய்கிறார்.

முகப் பொலிவு கூட்டும் சிகிச்சையில் சுருக்கங்களை நீக்குதல் முக்கியமானதொரு சிகிச்சையாகும். இறக்குமதி செய்யப்பட்ட போடோக்ஸ் மற்றும் ரெஸ்டிலேன் ஊசி மருந்து கொண்டு வலியின்றி சுருக்கங்களை நீக்கி விடுகின்றனர். முகத் தசைகள் தளர்ந்து வயதான தோற்றம் கொடுக்கும்போது, இறக்குமதி செய்யப்பட்ட நவீன மருத்துவ இயந்திரங்களின் உதவியுடன் முகத் தசைகள் வலுவூட்டப்பட்டு, முகப் பொலிவு கூட்டப்படுகிறது.

அழகாகத் தோற்றமளிப்பதில் ஆண் பெண் இருபாலாருக்கும் உள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு மருத்துவ ரீதியாகத் தீர்வு வந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை என்பதும் உண்மை என்கிறார் அவர். அதிகச் செலவு பிடிக்குமோ என்ற அச்சத்தினாலும், இத்துறையில் நிபுணர்கள் (Cosmetic Dermatologist) பரவலாக இல்லாததும் காரணமாகும். ஆனால், இத்துறையின் அபார வளர்ச்சி குறித்து பொது மருத்துவர்கள் உணர்ந்திருப்பதால், நோயாளியின் பிரச்சினைகளைத் தனிப்பட்ட முறையில் அறிந்த அவர்கள் இப்போது இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அழகுக் குறைபாடுகளால் அவதிப்படுவோர் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் தயக்கங்களை ஒதுக்கி வைத்து விட்டு, மனம் விட்டுப் பேச வேண்டியதுதான். அழகூட்டும் தோல் மருத்துவர்களிடமோ, அல்லது அவர்களது குடும்ப வைத்தியரிடமோ பிரச்சினைகள் குறித்துப் பேசி, அதற்கான தீர்வு என்ன, என்ன செலவு பிடிக்கும், எத்தனை நாட்கள் மருத்துவமனை செல்லவேண்டியதிருக்கும், கிடைக்கப் போகும் பலன்கள் என்று பேச வேண்டியதுதான்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அழகுக் கவலைகள் அர்த்தமற்றவை என்கிறார் மருத்துவர் ஹேமா சதீஷ்.

தொடர்புக்கு: 0091 452 2529504