நிரீழிவால் கால்களை இழப்பதை தடுக்கும் நவீன சிகிச்சை

  • Dr.Vijay Viswanathan
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
நிரீழிவால் கால்களை இழப்பதை தடுக்கும் நவீன சிகிச்சை

எம்.வி. டயபடிக் மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை நிபுணர் விஜய் விஸ்வநாதனை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

சர்க்கரை வியாதி ஒரு முறை வந்துவிட்டால், அதனை பூரணமாக குணப்படுத்தமுடியாது என்றும், ஆயுள் முழுவதும் மாத்திரைகளையும், உணவுக்கட்டுபாடுகளையும் கடைபிடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்களே... ஏனிந்த நிலை? மருத்துவத்துறை இதற்கு மாற்றாக எதனையும் கண்டறியவில்லையா?

ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால், அதனை பூரணமாக குணப்படுத்த இயலாது. ஆனால் தகுந்த சிகிச்சைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். அதனால் தான் நாங்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வரும் எல்லாவித நோயாளிகளிடமும், வருமுன் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்பதனை வலியுறுத்துகிறோம்.

சர்க்கரை வியாதியை தடுக்க இயலுமா? என்றால் தடுக்க இயலும். சர்க்கரை வியாதி, விதம் ஒன்று மற்றும் விதம் இரண்டு என இரண்டு வகைப்படும். இதில் விதம் ஒன்று எனப்படும் சர்க்கரை வியாதி, குழந்தைகள் முதல் பதினைந்து வயதுவரையுள்ளவர்களுக்கு வருவது. இதனை தடுக்க இயலாது. இதற்கான நவீன சிகிச்சை முறைகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. பரம்பரை காரணமாகவும், வயிற்றின் இரண்டு பக்கங்களைச் சுற்றிலும் சேரும் கொழுப்புகளாலும் உருவாகும் விதம் இரண்டு வகை சர்க்கரை வியாதியை, ஆரம்ப நிலையில் கண்டறிப்பட்டால் 75 சதம் வரை கட்டுக்குள் வைத்திருக்க இயலும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புகளால் இன்சுலின் சுரப்பின் செயல்பாடுகளில் சமச்சீரற்ற தன்மை உருவாகி, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

பெற்றோர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்து, அவர்களின் வாரிசுகள், உடற்பயிற்சியின்மை, உணவுக்கட்டுப்பாடின்மை, கொழுப்புச் சத்து இயல்பை விட அதிகமாக இருத்தல் ஆகியவைகளால் பாதிக்கப்பட்�டிருந்தால் அவர்களுக்கும்  நீரிழிவின் தாக்கம் வரக்கூடும். அதே தருணத்தில் அரிசியிலான உணவை அதிகமான உண்டாலும் இவை வரக்கூடும். ஏனெனில் அரிசியில் உள்ள கோர்ப்போஹைட்ரேட்  அதிகமாகி, அதுவே கொழுப்பாக மாறி, உடலின் எடையை அதிகரிக்கச் செய்யும். இதனால் நீரிழிவு உண்டாகும். ஹெச் பி ஏ ஒன் சி என்றதொரு பரிசோதனையின் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை கண்டறிந்துக்கொள்ளலாம். கடந்த மூன்று மாத கால சர்க்கரையின் அளவுகளைக் கண்டறியும் இப்பரிசோதனையில், அதன் அளவு 6.5 யிலிருந்து 7க்குள் இருக்கவேண்டும். இவ்வாறிருந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது என்றுணர்ந்துகொள்ளலாம். சாதாரணமாக மேற்கொள்ளும் பரிசோதனையில் உணவிற்கு முன் 110 ஆகவும், உணவிற்கு பின் 160 ஆகவும் இருந்தால் கட்டுக்குள் இருக்கிறது என்றறியலாம்.

சர்க்கரை நோய் ஒரு இரத்த குழாய் தொடர்பான நோய் தான். ஏனெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் கண், காது, இதயம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட அனைத்துப்பகுதிகளுக்கும் செல்லும் இரத்த குழாய்களில் பாதிப்பைப் ஏற்படுத்தும். கொழுப்பு, குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை ஆகியவை சேர்ந்து இரத்த குழாய்களில் ஒரு அடுக்குப்பகுதியை தோற்றுவிக்கும். இதன் மூலம் இரத்த குழாய் பகுதிகளில் ஒருவித அடைப்பை உருவாக்குகிறது. மாரடைப்பு ஏற்படுபவர்களில் 70 சதவீதத்தனருக்கு மேல் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதே தருணத்தில் கண் பார்வையிழப்பு ஏற்படுவோர்களிலும் நீரிழிவு நோயாளிகளே அதிகம். அதேப்போல் சிறுநீரகம் பழுதடைந்து டயாலிஸஸ் செய்துகொள்பவர்களில் நாற்பது சதவீதத்தினர் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களே. போர் மற்றும் விபத்தை தவிர கால்களையிழப்பவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகளே. எனவே உங்களை தற்காத்து கொள்வதே சிறந்தது.

உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருத்தல் அதாவது தினசரி உடற்பயிற்சி கட்டாயம். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கவேண்டும்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் கால்களை இழக்காதிருக்க சிறப்பான சிகிச்சையளித்து வருகிறீர்களாமே. அது எம்மாதிரியான சிகிச்சை?


சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த ஏராளமான நோயாளிகளை எதிர்கொண்டேன். அதிலும் குறிப்பாக வாடகை வாகனத்தின் சாரதியாக இருந்த ஒருவருக்கு சர்க்கரை நோய் தாக்கி, கால்களையிழந்து வறுமையில் வாடினார். அவரின் நிலைமையைக் கண்டு, அவரையும், அவரைப் போன்று இதனால் கால்களையிழந்தவர்களை மீட்பதற்காகவும் முனைந்து ஆய்வு செய்தேன். இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியையும், சுகாதார அமைப்புகளின் உதவியையும் பெற்றேன்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் பகுதியில் உணர்ச்சிகள் குறைய தொடங்கிவிடும். இத்தகைய தருணங்களில் அவ்விடத்தில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டால் கூட அதிலிருந்து தாக்கக் தொடங்கிவிடும். அல்லது அத்தகைய தருணங்களில் கால் பகுதிகளில் சிறிய கொப்புளங்கள் போல் தோன் றும். இந்த கொப்புளங்கள் சாதாரணமானது தானே என்று அலட்சியப்படுத்திவிட்டால், அது உள்ளுக்குள் ஆழமாகச் சென்று, காலின் முட்டிப் பகுதி வரை பரவிவிடும். முட்டி வரை பரவியவுடன் தான், காய்ச்சல் வரும். இந்த காய்ச்சல் தான் அறிகுறி. அப்போது சென்று மருத்துவர்களை அணுகினால் அவர்கள் கால்களை எடுக்கவேண்டிய அவசியத்தை எடுத்துரைப்பார்கள். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்காமல், புகைப்பிடிப்பவர்களில் 40 சதத்தினருக்கு மேல் கால்களில் உணர்ச்சியின்மையை சந்திப்பார்கள். ஏனெனில் இவர்களுக்கு இரத்த குழாய் பாதிப்புடன், நரம்பு பாதிப்பும் ஏற்படும். பாதிப்பைப் பொறுத்து ஒரு விரல், இரண்டு விரல் அல்லது ஐந்துவிரல், இறுதிக்கட்டமாக பாதம் முழுவதும் அகற்றப்படவேண்டிய சூழல் உருவாகும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் எப்போதும் காலணியை அணியவேண்டும். இதற்காகவே சென்னையில் உள்ள இந்திய நிறுவனத்துடன் இணைந்து புதிய ரக காலணியை உருவாக்கியிருக்கிறோம். அத்துடன் காலில் உணர்ச்சியில்லை என்று கூறி, சிகிச்சை பெற வருபவர்களை முதலில், அவர்களின் பாதத்தின் அடியில் ஒரு கண்ணாடியைப் பொருத்தி, துல்லியமாக எங்கேனும் புண் இருக்கிறதா? என ஆராய்கிறோம். அதே தருணத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய கால் நகங்களை வெட்டும் போது, சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது, அதனை உடனே கண்டறியாமல் போனதால், அவர் தன்னுடைய காலையேயிழக்கவேண்டியதிருந்தது. அதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும். நகத்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படித்தான் வெட்டிக்கொள்ளவேண்டும். குளித்து முடித்தவுடன் விரல்களுக்கிடையே இருக்கும் ஈரத்தை கவனமாக உறிஞ்சிட வேண்டும். இல்லையெனில் அப்பகுதிகளில் புண் வருவதற்கு வாய்ப்புண்டு.

நீங்கள் சர்க்கரை நோயாளிக்காக விசேடமாக பரிந்துரைக்கும் டயாஸ்டெப் என்ற காலணியை அணிந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்குமா?அல்லது குணமாகிவிடுமா?

இருபதாண்டுகளுக்கு முன் இதனை அறிமுகப்படுத்தவேண்டும் என்று எண்ணும் போது, அந்த காலகட்டத்தில் தொழுநோயாளிகள் அணியும் காலணியைப் போன்ற தோற்றத்தில் வடிவமைத்ததால், இதனை அணிய மறுத்தார்கள். இதற்காக மீண்டும் ஆய்வு செய்து, காலணியின் அமைப்பை மாற்றி, புதிதாக பெயரையும் சூட்டினோம். ஆனால் அதனை ஒவ்வொரு நோயாளிக்கும் விசேடமாக தயாரிக்கவேண்டியதிருந்தது. இதனையும் மாற்றியமைக்க திட்டமிட்டோம். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வகையில் உருவானது தான் டயாஸ்டெப் என்ற வகை காலணி. இவ்வகையான காலணியை பயன்படுத்தும் நோயாளிகள் தங்களின் வசதிக்கேற்ப இதனை மாற்றியமைத்துக்கொள்ளலாம். பொதுவாக இவர்களுக்கு மாலையானால் கால்களில் சற்று வீக்கம் ஏற்படும். அதனை எதிர்கொள்ளும் நோக்கிலும், அம்மாதிரியான தருணங்களில் நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை தாங்கி கொள்ளும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனையணியாமல் நடந்தால் என்னாகும்? என்றால், வேறு காலணிகளை அணிந்து நடப்பவர்களின் பெருவிரல் பகுதியில் அழுத்தம் அதிகமாகி, தோல் தடித்துவிடும். இதனை மருத்துவர்கள் காலஸ் என்று குறிப்பிடுவார்கள். இந்நிலையில் அப்பகுதியில் ஏற்படும் தொடர் அழுத்தம் காரணமாக புண் ஏற்பட வாய்ப்புண்டு. புண் ஏற்பட்டுவிட்டால் கால்களை தாக்கும் என்பது உறுதி. விரலையோ அல்லது பாதத்தையே இழக்கவேண்டியதும் உறுதி. குறிப்பாக அதிக தூரம் நடப்பதையே தொழிலாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறேன். இதற்காகவென எங்கள் மருத்துவமனையின் தலைமையகமான சென்னையில் ஒரு தனிப்பிரிவே தொடங்கியிருக்கிறோம். இங்கு இதற்கென தனியாக ஆய்வு கூடமும் உண்டு. அத்துடன் மருத்துவர்களுக்கும் சிறப்பு பயிற்சியை அளிக்கிறோம். நோயாளிகளுக்கு விழிப்புணர்வையும் வழங்கி வருகிறோம். இப்படியொரு பிரிவு இயங்கி வருவது இந்தியாவில் இது தான் முதன்முறை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அதே தருணத்தில் வெளிநாட்டியிலருந்து வரும் நோயாளிகளுக்கென தனியாக இரண்டு அறைகளை ஒதுக்கி, விரைந்து சேவையாற்றி வருகிறோம்.

எவ்வித சத்திர சிகிச்சை செய்வதற்கு முன் சர்க்கரையின் அளவு கருத்தில் கொள்ளப்படுகிறது. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் மருத்துவ காரணங்கள் என்ன?

சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். நம் உடலின் மேற்புறத்தில் இருக்கும் தோல் மிகப்பெரிய ஆர்கன். இது உடலை பத்திரமாக பாதுகாக்கிறது. இந்நிலையில் சத்திர சிகிச்சை செய்யும் தோலின் வழியாக கிருமிகள் உடலுக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு. அதற்காக தொண்டை வழியாக கிருமிகள் செல்லாதா? என கேட்பீர்கள். செல்லும். அதற்காகத்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்திக்கொண்டேயிருக்கிறோம்.

கருத்தரிக்கும் பெண்களுக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்குமாமே உண்மையா?

ஆம் உண்மை தான். ஆனால் அது தற்காலிகமானது தான். நிரந்தரமல்ல. கருதரித்தவுடன் ஏற்படும். பிரசவம் முடிந்தவுடன் மறைந்துவிடும். ஆனால் அதே தருணத்தில் நாற்பது வயதாகிவிட்டால் இருபாலார்களுக்கும் சர்க்கரை நோய் வரலாம். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை.

தொடர்புக்கு: 0091 44 2595 4913