தலைவலியை அலட்சியம் செய்யாதீர்கள்

  • Jan 24, 2018
 
தலைவலியை அலட்சியம் செய்யாதீர்கள்

மதுரையில், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளில் மிகப்பிரபலமான மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.ஜே.அருண்குமார் அவர்களை medicalonline.in க்காகச் சந்தித்தோம்.

நரம்பு மண்டலம் தொடர்பான பொதுவான நோய்களாக எவற்றைச் சொல்வீர்கள்? அவற்றுக்கான சிகிச்சை முறைகள் எவை?

ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய்களைப் பிரதானமாகச் சொல்லலாம். இது இரண்டு விதமாக நிகழ்கிறது. ஒன்று, மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் அடைத்துக்கொள்வது. இரண்டாவது, அந்த இரத்தக் குழாயில் இரத்தக் கசிவு, குழாய் வெடிப்பு. இதன்போது ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. அடுத்ததாக, ஆங்கிலத்தில் `ப்ரெய்ன் டியூமர்\' என்று சொல்லப்படும் மூளையில் தோன்றக்கூடிய கட்டிகள். ஆரம்ப காலங்களில் இதுபோன்ற மூளைக்கட்டிகள், வயதானவர்களுக்கே தோன்றின. ஆயினும் இப்போது வயது வித்தியாசமின்றி மூளையில் கட்டிகள் தோன்றுகின்றன. கடந்த மாதம்கூட, நான்கே வயது நிரம்பிய ஒரு சிறுவனுக்கு மூளைக்கட்டிக்காக அறுவைச்சிகிச்சை செய்தேன். அடுத்ததாக, தண்டுவடத்தில் ஏற்படும் கோளாறுகள். இன்று அதிகரித்துக் காணப்படும் கணனி தொடர்பான வேலைவாய்ப்புகளால் தண்டுவடக் கோளாறுகள் இளைஞர்கள் மத்தியிலும் பெருகி வருகின்றன.

அத்தோடு, திரைப்படக் கதாநாயகர்களின் `சிக்ஸ் பேக்\' எனப்படும் உடற்கட்டின்பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், தமது அதீத ஆர்வத்தினாலும் முறையற்ற பயிற்சி முறைகளாலும் தண்டுவடச் சவ்வுகள் விலகி நரம்புகள் அழுத்தப்படுவதால் தண்டுவடம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அதற்கிணையாக மருத்துவ வசதிகளும் அதிகரித்து வருகின்றன. நோயை அறிந்துகொள்ளவும் அதன் பிரகாரம் சிகிச்சை அளிக்கவுமென சி.டி.ஸ்கேனர், ஆஞ்சியோகிராம் போன்ற அதிநவீன கருவிகள் இன்று குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. சாவித்துவார சிகிச்சைகள் போன்றனவெல்லாம் இப்போது முழு அளவில் வெற்றிதரத் தொடங்கியிருக்கின்றன.

உங்கள் மருத்துவமனையில் விபத்துக்களால் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றதே?


உண்மைதான். எமது மருத்துவமனையில் பல்வேறு வகையான விபத்துக்களால் மூளை, தண்டுவடம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டோர் பெருமளவிலும், பொலிட்ரோமா எனப்படும் ஏனைய உடல் சிதைவுகளால் பாதிக்கப்பட்டோரும் பெருமளவில் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றுள் மூளை, தண்டுவடம் போன்ற உறுப்புகளின் பாதிப்புக்கள் விரைவாகவும் மிகக் கவனமாகவும் செய்யப்படவேண்டிய சிகிச்சைகளாகின்றன. இப்படியான விபத்துக்களில் சிக்கிக்கொள்பவ 92;்கள் அதிகளவில் இங்கு வருவதற்குக் காரணம், எமது மருத்துவமனையில் காணப்படும் உபகரணங்களும் அவற்றின் அமைவிடங்களுமே. விபத்தில் சிக்கிக்கொள்பவருக்கு எவ்வளவு சீக்கிரமாக சிகிச்சை வழங்குகிறோமா, அந்தளவுக்கு அவர் பாதிப்பிலிருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. விபத்தைப் பொறுத்தவரை கோல்டன் ஹவர் எனப்படும் அந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சையை ஆரம்பித்து விடுவது நல்லது. விபத்தினால் காயப்படுவோரில் பலர் சுயநினைவற்றவர்களாகவே மருத்துவமனைக்கு எடுத்துவரப்படுகிறார்கள். எமது மருத்துவமனையைப் பொறுத்தவரையில், அதிநவீன மருத்துவ உபகரணங்களை, சரியான, பொருத்தமான இடத்தில் வைத்திருப்பதால், அவர்களில் 99.2 சதவீதத்தினரை குணப்படுத்தி அனுப்ப முடிகிறது. இங்கு வரும் நோயாளிகளை, சி.டி. ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தி, ஐந்தே நிமிடங்களில் அவருக்கு மருந்து வழங்கி குணப்படுத்தலாமா அல்லது அறுவை சிகிச்சை வழங்கவேண்டுமா என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிவதால் உடனடியாகச் செயலில் இறங்கிவிட முடிகிறது.

சி.டி. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் போன்ற அதிநவீன உபரணங்கள் பாவனையின்போது நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் `கொன்ட்ராஸ்ட்\' திரவத்தினால் சிறுநீரகக் கோளாறுகள் வரலாம் என்கிறார்களே? இது நோயாளிகளுக்குப் பாதகமான விளைவு அல்லவா?

\'கொன்ட்ராஸ்ட்\' திரவத்தை ஏற்றுக்கொள்ளாத உடற்றன்மை உடைய நோயாளிகள், அதாவது கொன்ட்ராஸ்ட்டினால் ஏற்படக்கூடிய ஒவ்வாமையால் ஏற்படும் ஒருசில அசௌகரியங்களைச் சொல்லலாமே தவிர வேறு பெரும் பாதிப்புகள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்களா என்பதை சிகிச்சைகளுக்கு முன் நிச்சயமாகக் கேட்டு அறிந்துகொள்வது வழக்கம். அதுபோலவே, நோயாளிகளின் எடை மற்றும் வயது என்பவற்றை அனுசரித்து, மிகக் குறைந்த அளவிலேயே `கொன்ட்ராஸ்ட்\' பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாகவே, எந்தவொரு நோயையும் நாம் ஆரம்பகட்டத்திலேயே அறிந்துகொள்ள முடிவதில்லை. இந்நிலையில், மூளையில் ஏற்படக்கூடிய நரம்பு தொடர்பான நோய்களை எவ்வாறு முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்?


தலைவலிதான் முதல் அடையாளம். ஆயினும் அதை அடையாளம் கண்டுகொள்வதில் சற்றுச் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், நூறு பேரை எடுத்துக்கொண்டால், அவர்களில் பத்துப் பேர் மைக்ரெய்ன் அல்லது ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படும் தொந்தரவு உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதுபோன்ற தலைவலி, ஒரு நாளின் பிற்பகுதியில், அதாவது சாயங்கால நேரத்திலேயே அதிகமாகத் தோன்றும். ஆனால், மூளையில் கட்டிகள் உருவாகியிருந்தால், காலையில் நித்திரை விட்டு எழும்பும்போதே கடும் தலைவலியுடன் எழுந்திருப்பார்கள். இது, அவர்களுக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும். நாளாக நாளாக அது அதிகரித்துக்கொண்டே போகும். காலையில் தலைவலியுடன் வாந்தியும் வரும். இவையனைத்தையும் கொண்டு, இது சாதாரண தலைவலி அல்ல என்பதைக் கண்டுபிடிக்கலாம். இப்படியான அறிகுறிகள் தோன்றியவர்கள், எந்தக் காரணமும் சொல்லாமல் தம்மை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய் அடைப்புக்களால் மாரடைப்பு ஏற்படுவது போல், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் அடைப்புகளால் `ஸ்ட்ரோக்\' அல்லது `ப்ரெய்ன் அட்டாக்\' என்று சொல்லப்படுகின்ற மூளைப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பக்கவாதம் போன்றன ஏற்படுகின்றன. நாற்பது அல்லது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிக கொழுப்புச் சத்து காணப்பட்டால், நீண்டநாள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் இதுபோன்ற பக்கவாதங்கள் தோன்ற பெரும்பாலும் இடமுண்டு. தலைக் கிறுகிறுப்பு, ஒரு பக்க உறுப்புகள் பலவீனமானதாக உணர்தல், ஒரு பக்க உறுப்புகள் விறைத்துப்போன உணர்வு போன்றவற்றை இதற்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம். மேலும், நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு. அதன்போது, கை மற்றும் கால்கள் பலவீனமாக உணர்தல், அவை விறைத்துப்போன உணர்வு போன்றன அறிகுறிகளாகத் தோன்றும். இவ்வகையான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக ஸ்கேனிங் முறை மூலம் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

நரம்புத் தளர்ச்சி தோன்றுவதற்கான காரணங்கள் என்ன?

போஷாக்குக் குறைவு அல்லது போஷாக்கின்மையைச் சொல்லலாம். அதிலும் விட்டமின் பி12 குறைபாட்டால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கிருமித் தொற்றால் ஏற்படும் நோய்கள் மற்றும் காய்ச்சலாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகலாம். உடலின் ஒரு உறுப்பில் தொற்றும் வைரஸ் கிருமிகள் மூளையைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. நெஞ்சில் தோன்றக்கூடிய டி.பி. என்று சொல்லப்படும் காசநோய் மற்றும் ஒரு சில புற்றுநோய்க் கிருமிகளும் மூளையைத் தாக்க இடமுண்டு. விளைவு...? நரம்புத் தளர்ச்சி.

மார்பகப் புற்றுநோய் போன்ற பெண்களிடம் மட்டுமே தோன்றக்கூடிய நோய்கள் போல, பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூளைக் கட்டிகள் இருக்கின்றனவா?

மூளைக் கட்டிகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதம் இல்லை. எல்லோருக்குமே மூளைக் கட்டிகள் தோன்றலாம். அவற்றுள், `மெனிஞ்சியமா\' என்கிற மூளைக் கட்டிகள் பெரும்பாலாகப் பெண்களிடமே தோன்றுகின்றன. ஏனைய `ட்யூமர்\'கள், அதாவது கட்டிகள் அனைத்தும் யாருக்கும் வரலாம்.

பார்கின்ஸன் மற்றும் ஆட்டிஸம் போன்ற நோய்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குவீர்களா?


இது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகலாம். குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு பார்கின்ஸன் நோய் ஏற்பட்டதிலிருந்து, பாரம் தூக்குபவர்கள், பளு தூக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்நோய் ஏற்படலாம் என்றொரு தவறான கருத்து நிலவுகிறது. ஆயினும் பாரம் தூக்குவதற்கும் பார்கின்ஸனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், பார்கின்ஸன் தோன்றுவதற்கு புறக் காரணங்கள் எதுவுமே இல்லை. நம் உடலில் இன்சுலின் குறைவாகச் சுரப்பதனால் நீரிழிவு நோய் உருவாவதைப் போலவே, மூளையின் ஒரு பகுதியிலிருந்து சுரக்கக்கூடிய `டோபர்மைன்\' எனும் திரவம் குறைவாகச் சுரப்பதனாலேயே பார்கின்ஸன் நோய் உருவாகிறது. பரம்பரை மூலம் கடத்தப்படக்கூடிய நோய் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டிஸம் என்பது பிறப்பிலேயே மூளை வளர்ச்சி குன்றியவர்கள், நரம்பு சம்பந்தமான கோளாறுகள், பார்கின்ஸன் போன்றே ஒரு சில சுரப்பிகளின் தொழிற்பாட்டில் உண்டாகும் பாதிப்புகளால் தோன்றக்கூடியது. பரம்பரை வழியே இது கடத்தப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும் இவற்றுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது நெருங்கிய உறவுகளுக்குள் செய்துகொள்ளும் திருமணங்களே. ஆட்டிஸம் மட்டுமன்றி டிஸ்லெக்ஸியா, மென்ட்டல் ரிட்டார்டேஷன் போன்ற மூளை தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் இரத்த உறவுத் திருமணங்களாலேயே ஏற்படுகின்றன. ஆகையால், முடிந்தவரை உறவினர் அல்லாதோரைத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் இதுபோன்ற குறைபாடுகளைத் தவிர்க்க முடிவதோடு, பிறக்கும் குழந்தைகள் மிகப் புத்திசாலிகளாகத் திகழவும் வாய்ப்புகள் உண்டு.

பிறவியிலேயே கை, கால் நரம்புகள் மற்றும் தண்டுவடக் கோளாறுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றனவே?

அதற்கு `குரோமோசோம்கள்\' அல்லது `ஜீன்\'கள் எனப்படும் பரம்பரை அலகுக் குறைபாடுகளே காரணம் என்று சொல்லப்பட்டாலும், கர்ப்ப காலத்தில் ஒரு தாய்க்கு ஏற்படக்கூடிய கிருமித்தொற்று நோய்கள், அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகள், சிறுவயதிலேயே தாய்மையடையும் தாய்மார் போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். முக்கியமாக, கர்ப்ப காலத்தில், மகப்பேறு அல்லது பெண் நோயியல் மருத்துவர்களின் அனுமதியின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்று கர்ப்பிணிகள் கேட்டுக்கொள்ளப்படுவது, இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவே.

தொடர்புக்கு: 0091 4522585822