உடல் எடை அதிகமானால் ருமாட்டாய்ட் ஆர்த்தரைட்டீஸ் பாதிப்புண்டு

  • Dr.Kunal Dheep
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
உடல் எடை அதிகமானால் ருமாட்டாய்ட் ஆர்த்தரைட்டீஸ் பாதிப்புண்டு

“மூட்டு மாற்று சத்திர சிகிச்சை, இடுப்பு மாற்று சத்திர சிகிச்சை, இதனையடுத்து மிக அரிதாக தோள்பட்டை மாற்று சிகிச்சை, எல்போ ரீபிளேஸ்மெண்ட் மற்றும் அனைத்து ஜாயிண்ட்களுக்கான ரீபிளேஸ்மெண்ட் சிகிச்சையும் தற்போது பிரபலமாகி வருகிறது.

அதுமட்டுமல்ல முழு உடலையும் மாற்று சிகிச்சை மூலம் புனரமைக்க முடியும். உடலில் எந்த பகுதியிலாவது தேய்மானம் ஏற்பட்டுவிட்டால் அதற்கு உலோகத்தாலான பொருளை பதிலீடாக பொருத்தி சிகிச்சையளிப்பது தான் ரீபிளேஸ்மெண்ட் என்கிறோம். அதிலும் மாற்றப்படுவது பெரும்பாலும் எலும்புகளும், அவை சந்திக்கும் இடங்களாகத்தான் இருக்கும். எப்படி ஒரு இதயத்திற்குள் பேஸ்மேக்கர் பொருத்துகிறோமோ, எப்படி ஒரு கண்ணிற்குள் லென்ஸை பொருத்திக் கொள்கிறோமோ அதே போன்று தான் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையிலும் செய்கிறோம். கண்ணில் பொருத்தப்பட்ட லென்ஸானது பழுதடைந்து போனால் எப்படி மாற்றிக் கொள்கிறோமோ அதே போன்றது தான் இந்த இடுப்பு மற்றும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைகளும்” என்று எம்முடன் இயல்பாக பேசத் தொடங்கு கிறார் Dr,குணல் தீப். இவர் மதுரையில் உள்ள தாஜ் மருத்துவமனையில் எலும்பு மாற்று சத்திர சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அத்துடன் இதற்காக தென்கொரியாவில் விசேட பயிற்சியும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடுப்பு - மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கான காரணங்கள் என்ன?

இடுப்பு மற்றும் மூட்டுகளில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு இருபது வகையான காரணங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையாக ருமாட்டாய்ட் என்கிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மூட்டு மாற்று சத்திர சிகிச்சை அவசியமாக தேவைப்படும். இந்த ருமாட்டாய்ட் எலும்பை மென்மையாக்கி விடும் தன்மையைக் கொண்டது. ஒவ்வொரு ஜாயிண்ட்டும் ஒரு இயந்திரம் போன்றது. அதன் பணி தொடர்ச்சியாக இருக்கும். அதிலும் தற்போது மாற்றிய மைக்கப்படும் மூட்டு மாற்று சிகிச்சையின் கால அளவு 30 ஆண்டுகளுக்கு உறுதியுடையதாக இருக்கிறது.

அதேபோல டயாபட்டீஸீக்கும் இதற்கும் நேரடியாக தொடர்பில்லை என்றாலும், இவைகளால் எலும்புகளின் சத்து குறைவதற்கு வாய்ப்புண்டு. அதாவது ஆஸ்டியோபோ ரோசிஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இறுதியில் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ் என்ற எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகிறார்கள்.

அதேபோல் இடுப்பு, மூட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் இருக்கும் சவ்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவ்விடத்தில் புதிய திசுக்களை பொருத்தவோ அல்லது சவ்வுகளை மாற்றியமைக்கவோ இந்த ஆர்த்தோஸ் கோப்பிக் எனப்படும் நுண் துளை சத்திர சிகிச்சை பலனளிக்கிறது. முழங்கால் மூட்டுகளில் உள்ள இரண்டு பிரதான சவ்வுகளுக்கு மீண்டும் வளர்ச்சியடையும் தன்மையில்லாததால் அதனை மாற்றியமைக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் சவ்வுகளுக்கு நிலையான தன்மையை ஏற்படுத்துகிறோம். இதனைத் தொடர்ந்து மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை தள்ளி வைக்கிறோம். தோள்பட்டை வலி மற்றும் தோள் பட்டை மூட்டு மாற்று சத்திர சிகிச்சையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இத்தகைய சத்திர சிகிச்சையின் பின்விளைவு மற்றும் ஆயுள் குறித்து..?

நாங்கள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு பின்னர் அறிவுறுத்தும் வழிகாட்டுதல்களை முறையாக மறவாமல் உறுதியாக கடைபிடித்தால் நாங்கள் பரிந்துரைத்த 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறப்பாக செயல்படும்.

ஆனால் எங்களின் அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்தியோ அல்லது புறகணித்தோ முழங்கால்களை உங்களின் விருப்பப்படி கையாண்டீர்கள் என்றால் அவை 30 வருடத்திற்குள் ழுதடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாங்கள் பொருத்துவது உலோகம் தான். அதற்கும் ஒரு ஆயுள் தன்மை இருக்கும். 30 ஆண்டுகளுக்கு பின்னர் எங்களிடம் பரிசோதனைக்கு வரும் போது நாங்கள் அதனை பரிசோதித்து, அதில் பொலி எதிலின் லைனர் என்ற ஒன்றை மட்டுமே மாற்றவேண்டியதிருந் தால் அதனை மட்டும் மீண் டும் பொருத்தி விடுவோம். அதன் பிறகு மீண்டும் இதன் ஆயுள் 30 ஆண்டுகள் நீடிக்கும். இந்த நிலையை எம்முடைய வீட்டில் குக்கருக்குள் பொருத்தும் காஸ்கட்டை போன்று இருக்கும் என்று சொல்லலாம்.

என்னென்ன கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கிறீர்கள்?

எக்காரணம் தொட்டும் மேலிருந்து குதிக்கக்கூடாது. சம்மணமிட்டு அமரக்கூடாது. இயல்பான நடையை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளக்கூடாது. ஒரு சிலர் இத்தகைய ஆபரேஷனுக்கு முன்னர் அவர்களின் நடை சற்றே விகாரமாகவும் கடினத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்காகத்தான் இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருப்பார்கள். அதனால் அதனை மனதில் வைத்து தங்களின் நாளாந்த வாழ்க்கை நடைமுறையை மாற்றிக் கொண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும். அதேபோல் நாற்காலியில் எவ்வளவு நேரம் அமரவேண்டும்? எப்படி அமரவேண்டும்? என்ற பரிந்துரையையும் மீறக் கூடாது. அதே சமயத்தில் இதனால் ஒரு தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்காது.

எம்மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

பொதுவாகவே தற்போதைய சூழலில் குழந்தைகளின் விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. இதனை மாற்றியமைத்து, அவர்களை பொது வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். எம்முடைய எலும்புகள் டைனமிக் ஸ்ட்ரெக்ச்சர் அமைப்பைக் கொண்டது. ஸ்டாடீக் ஸ்ட்ரெக்சர் கிடையாது. ஒவ்வொருவருடைய தேவையைப் பொறுத்து எம்முடைய எலும்புகள் மாறக்கூடிய தன்மையை பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு குழந்தையும் விளையாடினால் அவர்களின் தான் எலும்புகள் வலுவடையும்.

அதேபோல் உடல் எடையை எலும்புகள் மட்டுமே தாங்கிக் கொள்ளாமல் சற்று தசைகளுக்கும் தர விரும்பினால் அதற்குரிய பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் எடையையும் சரியாக பராமரிக்க முடியும். இதற்கான பிரத்யேக பயிற்சிகளை பிஸியோதெரபி ட்டுகளிடம் கேட்டு அவர்களின் அறிவுரையில் மேற்கொண்டால் பலனுண்டு.

உடற்பருமனுக்கும் மூட்டு வலிக்கும் உள்ள தொடர்பு?

45 வயதிற்குட்பவர்களுக்கு ருமாட்டாய்ட் ஆர்த்தரைட்டீஸ் வருவதற்கு அவர்களின் உடல் எடையே மிக முக்கியமான காரணமாகும். அதேபோல் பெண்களுக்கு 45 வயதிற்கு மேல் மாதவிடாய் நின்ற பிறகு அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மூலம் எலும்புகளுக்கு கிடைத்து வந்த ஊட்டம் குறைந்து விடுவதன் காரணமாக அவர்களுக்கு மூட்டு வலி வருகிறது. அதிலும் ஆஸ்டியோ போரோஸிஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனையடுத்து 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் அதிகமாக இருப்பதால் அவர்களின் மூட்டு தேய்மானம் அடையத் தொடங்கி வலியாக உணர்த்துகிறது.