எலும்பு மூட்டுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி?

  • Dr.Bharath Kumar
  • Oct 01, 2022
Appointment                Doctor Opinion          
 
எலும்பு மூட்டுப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி?

ஒரு வயலுக்கு தண்ணீர் தொடர்ந்து பாய்ச்சாமல் விட்டால், மண் எப்படி பாளம் பாளமாக விரிசல் விடுகிறதோ அதுபோலத்தான் குருத்தெலும்பும்! குருத்தெலும்புகளுக்குள் அடங்கியிருக்கும் 90 சதவீதமான பொருள், தண்ணீர்ச் சத்துதான். எனவே, போதுமானளவு தண்ணீர் அருந்துவதைப் பழக்கப்படுத்திக்கொண்டால், உடல் வெப்பமடைவதைத் தடுக்க முடிவதோடு, குருத்தெலும்புகளில் பாதிப்பு ஏற்படுவதையும் தவிர்த்துக்கொள்ளலாம். 

 
புகைபிடிப்பதனாலும் உள்ளுறுப்புகளில் இருக்கும் தண்ணீர்ச் சத்து உறிஞ்சப்படுகிறது. எனவே புகையும் எலும்புகளுக்குப் பகையாகிவிடும். எனவே புகைத்தலை சர்வ நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.
 
அடுத்து, உடற்பயிற்சி! நமது Quadricep Muscle (குவாட்ரிசெப் மஸ்ல்) அதாவது, தொடைப் பகுதி முதல் முழங்காலுக்குச் சற்றுக் கீழே வரையான பகுதிகளுக்கு போதுமான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மூட்டுப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
 
ஷட்டில் காக் போன்ற விளையாட்டுக்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக, நாற்பது, ஐம்பது வயதானவர்களுக்கு திடீரென்று இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் ஏற்படுகிறது. அதில் தவறில்லை. ஆனால், முறையான பயிற்றுனர்களின் உதவியுடன் குறைந்தது இரண்டு வருடங்களேனும் பயிற்சி பெற்ற பின், தனியே விளையாடுவது நல்லது. விளையாட்டு சுவாரசியத்தில், இத்தனை நாட்களும் அசையாத மூட்டுக்கள் திடீரென அதுவும் கடுமையாக அசைவதனால் அவற்றின் வெடிப்புகள் ஏற்பட்டு உங்களது இயக்கத்துக்குத் தடையாகிவிடும். எனவே கவனம் அவசியம்!
 
யாத்திரை என்ற பெயரில் மலையேறும்போதும் மூட்டுக்களுக்கான காப்பு (Knee caps) அணிந்துகொண்டு ஆறுதலாக ஏறி இறங்குவது நல்லது!
 
உடற்பயிற்சிக்காக விளையாட விரும்புபவர்கள், அதற்குப் பதிலாக, சமதளத்தில், குறைந்தது 45 நிமிடங்கள் வேகமாக நடப்பதைப் பயிற்சி செய்து வந்தாலே போதும். 
 
இப்போது நவநாகரிக மாடல்களில் கார்கள் வருகின்றன. குறிப்பாக, தரையோடு வழுக்கிச் செல்லும் கார்கள். இதனுள் ஏறும்போதும் இறங்கும்போதும் கால் மூட்டுக்கள் தவறான திசையில் திருப்பப்படுகின்றன. இதனால் மூட்டுக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே, மிகுந்த கவனத்துடன் இந்தக் கார்களைப் பயன்படுத்த வேண்டும்.
 
உடல் எடை அதிகரிப்பதும் மூட்டுக்களைப் பாதிக்கும் மிகப் பொதுவான காரணி. எவ்வளவு எடை அதிகரித்தாலும் அதை மூட்டுக்களே தாங்க வேண்டியிருக்கிறது. எனவே, எடையை அளவோடு வைத்திருப்பதும் மூட்டுக்களைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையே!
 
டாக்டர் பரத்
எலும்பு மூட்டு மருத்துவர்
ஈஸ்வரா மருத்துவமனை
மதுரை