மூட்டு மாற்று சத்திர சிகிச்சை எளிதானது!

  • Dr.Sivamurugan
  • Jan 03, 2018
Appointment                Doctor Opinion          
 
மூட்டு மாற்று சத்திர சிகிச்சை எளிதானது!

இளைய தலைமுறையினர் இந்த நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் என்று உதாரணம் கூறி பேசி வருவதற்கு இனிமேல் சாத்தியமில்லாமல் போகலாம். காரணம் இன்றைய இளைய தலைமுறையினரின் முதுகெலும்பு விரைவில் தன் வலுவினை இழந்து வருகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம். ஆனால் இது தான் உண்மை. இன்றைய காலகட்டங்களில் அனைத்து துறைகளிலும் கொம்ப்யூட்டரின் முன் அமர்ந்து பணியாற்றும் பெரும்பான்மையோர் சந்தித்து வரும் தீராவலி முதுகு வலி. இதிலிருந்து விடுதலை கிடையாதா? என்று எண்ணுபவர்கள், முதலில் சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் சவுந்திரபாண்டியன் போன் அண்ட் ஜாயின்ட் மருத்துவமனை மற்றும் ஆராய்சி மையத்தின் நிர்வாக இயக்குநரும், எலும்பு மருத்துவத்தில் சத்திர சிகிச்சை நிபுணருமான டொக்டர் எஸ். சிவமுருகன் கூறுவதை கவனமாக கேளுங்கள்.

பெரும்பாலானவர்களை பாதிக்கும் மூட்டுவலிக்கு உடலுழைப்பின்மை, எலும்பு தேய்மானம், முதுமை, உடற்பருமன் இவற்றில் எந்த வகையான காரணம் முதன்மையாகிறது? மூட்டு வலிக்கு, மூட்டு மாற்று சத்திர சிகிச்சைத்தான் இறுதியான நிரந்தர தீர்வா?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவில் வாழும் தற்போதைய தலைமுறையினர் எதிர்நோக்கி கொண்டிருக்கும் மருத்துவ சவால் மூட்டு வலி. இதற்கு ஆதாரமான மூட்டு தேய்மானம் என்பது எல்லோருக்கும பொதுவானது. இயற்கையானது. சென்ற தலைமுறையினரை விட இந்த தலைமுறையில் வாழும் பெண்கள் நாற்பது வயதிற்குள் மூட்டுவலியால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆண்களிலும் அறுபது வயதிற்கு மேல் இயல்பாக வரும் மூட்டு தேய்மானம், தற்போதைய வாழ்க்கை முறையால் ஐம்பதுகளிலேயே தொடங்கிவிடுகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தோமானால் தெற்காசியர்களுக்கு பரம்பரையின் காரணமாகத்தான் இவை உருவாகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மூட்டு தேய்மானத்தில் இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று ரூமாடீஸ் ஓர்த்தரைட்டீஸ், மற்றொன்று ஓஸ்டியோ ஓர்த்தரைட்டீஸ். இதில் ரூமாடிக் ஓர்த்தரைட்டீஸ் என்பது இளவயது பெண்களை அதிகமாக தாக்குவது. ஓஸ்டியோ ஓர்த்தரைடீஸ் தான் பெரும்பான்மையானவர்களை தாக்குவது. மூட்டுகளில் வலி, மூட்டுகளில் வீக்கம், மூட்டுக்களிலிருந்து ஒருவிதமான ஒலி உருவாதல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருக்கும். எம்மில் பலருக்கும் மூட்டுகளில் வலி ஏற்பட்டவுடன், அருகிலுள்ள மருந்துகடைகளுக்குச் சென்று வலி நிவாரணிகளை வாங்கி, பயன்படுத்திக் கொண்டு, தற்காலிக நிவாரணத்தைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத முற்றிலும் தவறு. மூட்டுகளில் வலி ஏற்பட்டவுடன் அதற்குரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். அவர்கள் எக்ஸ்-றே மற்றும் குருதி பரிசோதனையை செய்து, மூட்டு வலிக்கான காரணத்தை ஆய்ந்தறி வார்கள்.

குருதி பரிசோதனையின் மூலம் ரூமாடீஸ் ஓர்த்தரைட்டீஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? இல்லையா? என்பதனை துல்லியமாக கண்டறிய இயலும். எக்ஸ்றே பரிசோதனை மூலம் மூட்டுகளின் தேய்மான அளவு கணக்கிடப்பட்டு, அதற்கேற்றாற் போல் சிகிச்சை வழங்கப்படும். ஓஸ்டியோ ஓர்த்தரைட்டீஸ், தொடக்கக் காலகட்டத்திலேயே கண்டறியப்பட்டால் அதற்கு உடல் எடையை குறைத்தாலே போது மானது. அவை குணமாகிவிடும். ஆனால் காலங்கடந்து வந்தால், அவர் களுக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைப்பதுடன், பிசியோதெரபி பயிற்சியினையும் வழங்கி தீர்வு காண்கிறோம். இதன் மூலம் அவர்களின் தசை இறுக்கமடைந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலும். அதன் பின் தினசரி நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இதனை கட்டுக்குள் வைத்திருக்கலாம். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் உரிய காலத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் பாதம் நேராக இருக்கும் தன்மையிலிருந்து விலகத் தொடங்கும். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஓஸ்டியோ ஓட்டமின் என்ற சத்திர சிகிச்சைச் செய்து மீட்டெடுக்கிறோம்.

மூட்டுகளின் தேய்மானம் அதிகரிக்கும் போது பாதங்களின் அமைப்பு நேராக இருக்காது. இதன் காரணமாக மூட்டு வலியுடன், முதுகு வலியும் இணைந்து சொல்லொண் துயரத்தை ஏற்படுத்தும். அதுபோன்ற தருணங்களில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் இறுதியான மற்றும் உறுதியான தீர்வு. மூட்டு மாற்று சத்திர சிகிச்சை மூலம் மீண்டும் பழைய நிலையை அடையலாம். வயதானவர்களாக இருந்தால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு பின் தங்களுடைய இயல்பு வாழ்க்கையில் சற்று கட்டுப்பாடுடன் நடந்தால் மிகச்சிறந்த பலனைத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை. அதே தருணத்தில் நீ ரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் சரியான தெரிவு.

முதியவர்களுக்கு செய்யப்படும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி சதவீதம் எவ்வளவு? அத்துடன் இந்த சத்திர சிகிச்சையின் பிந்தைய கால அளவீடு எவ்வளவு?

எங்கள் மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்ட மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி சதவீதம் 99 சதம். பொதுவாக பார்க்கும் போது 95 சதம். இந்த சத்திர சிகிச்சை செய்து கொண்டபின் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மூட்டு பகுதியில் எந்தவித சத்திர சிகிச்சை யை செய்ய தேவையிராது. இருப்பினும் செயற்கையான மூட்டு என்பதால் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும். ஏனெனில் இயற்கை வழங்கிய மூட்டின் தன்மையே நாற்பது வருடங்கள் மட்டுமே செயல்படுகின்றன. மிகச்சிலருக்கு மட்டும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு பின்னர் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை தேவைப்படும். பொதுவாக இது போன்ற சத்திர சிகிச்சை யின் வெற்றியில் மருத்துவ குழுவினரின் கூட்டு முயற்சி பின்னணியாக கொண்டிருக்கும். மருத்துவ நிபுணர்கள், சத்திர சிகிச்சை க்கான இடம், அதி தீவிர கண்காணிப்பு பகுதி, பிசியோதெரபி, நோயாளியின் ஒத்துழைப்பு ஆகியவை ஒருங்கிணைந்தால் தான் இதுபோன்ற சத்திர சிகிச்சை வெற்றி பெறும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறுவதை விட, மாற்று மருத்துவ முறையான `மாவு கட்டு\' சிகிச்சையினைப் பெறுவதால் எம்மாதிரியான பின்விளைவு ஏற்பட சாத்தியமுண்டு?

எலும்பில் முறிவு ஏற்பட்டுவிட்டால் அதனை விரைவில் குணப்படுத்துவது தான் மருத்துவ துறையினரின் பணி. மாற்று மருத்துவத்தில் வழங்கப்படும் சிகிச்சையால் நோயாளி அதிக நேரம் வீட்டிலேயே தங்க நேரிடும். கை, கால்களை அசை க்ககூடாது என்று அறிவுரை வழங்குவதால் தசை கள் செயல்படாமல் இறுக்கமடைய நேரிடும். தொடர்ந்து படுக்கையில் ஓய்வு எடுக்க வலியுறுத்துவதால் மூட்டுகள் பாதிப்படைய வும் வாய்ப்பிருக்கிறது. இதனால் ஆங்கில மருத்துவத்தின் படி சிகிச்சை பெற்றால், எங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ அங்கு இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டு, குணமடைய செய்கிறோம். இதனால் பின் விளைவுகள் இல்லை. விரைவில் குணமடைவார்கள். சிகிச்சை காலத்தில் பத்தியம் இருக்கவும் தேவையில்லை.

இளவயதில் விபத்தொன்றில் எலும்புமுறிவால் பாதிக்கப்பட்டு, ஆங்கில மருத்துவ முறைப்படி தகடு பொருத்தப்பட்ட சத்திர சிகிச்சையை மேற்கொண்டவர், பின்னாட்களில் தமக்கு ஏற்பட்ட மூட்டு வலிக்கு, தமக்குள் பொருத்தப்பட்ட இரும்பு தகடு தான் காரணம் என்கிறார். இது சரியா?

இல்லை. முற்றிலும் தவறு. விபத்தில் பாதிக்கப்பட்ட இந்த நபருக்கு அந்த தருணத்தில் மிக லேசான முறையில் மூட்டுகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எலும்பு முறிவு ஏற்படும்போது பொருத்தப்படும் இரும்பு தகடுகளால் பின் விளைவுகள் ஏற்படும் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

முதுகு தண்டில் சத்திர சிகிச்சை யை மேற்கொள்ளக்கூடாது என்றும், மேற்கொண்டால் பின்விளைவு உறுதி என்றும், வாழ்நாள் முழுவதும் முதுகு வலி இருந்துகொண்டேயிருக்கும் என்கிறார்களே... இது உண்மையா?

இன்றைய காலகட்டத்தில் வாழும் ஏராளமான இளைய தலைமுறையினர் உட்கார்ந்து பணியாற்றுவதாலும், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதாலும் தான் முதுகு வலி வருகிறது என்பதை முதலில் உணர்ந்துக்கொள்ளவேண்டும். சற்று வயதானவர்களுக்கு முதுகு வலி ஏற்படுவதற்கு எலும்பின் சக்தி குறைவதால் தான் ஏற்படுகிறது. இதற்கு ஓஸ்டியோ போறோசிஸ் என்று பெயர். ஓஸ்டியோ போறோசிஸ் என்றால் எலும்பு மெலிதல் என்று பொருள். இது பெரும்பாலான பெண்களுக்கு வருவது. பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் என்னும் சுரப்பிகளின் செயல்பாடு சமச்சீரற்ற தாகிவிடுவதால் எலும்பு மெலிந்துவிடுகிறது. கால்சிய சத்து மற்றும் விட்டமின் டி சத்து குறைவால் ஏற்படும் இதனை குருதி பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம். உட்கார்ந்து பணிபுரிவதால் தான் முதுகு தண்டுவடத்தின் வரிசை யே பாதிக்கப் படுகிறது. இதற்கு எளிய உடற்பயிற்சி மூலமே தீர்வு காண இயலும். மிகக் குறைவானவர்க்கே சத்திர சிகிச்சை தேவைப்படும்.

இடுப்பு எலும்பு மாற்று சத்திர சிகிச்சையில் உள்ள சவால்களைப் பற்றி...?

மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை விட எளிதானது. ஆனால் மிகச் சிலருக்கே இது தேவைப்படுகிறது. இருப்பினும் இவ்வகையான சத்திர சிகிச்சையில் வெற்றி உறுதி.

பிறவியிலேயே வளர்ச்சி குறைபாடுள்ளவர்களுக்கு லிம்ப்லென்த்னிங் என்ற நவீன சிகிச்சையின் மூலம் எலும்புகளை வளர்ச்சியடையச் செய்யலாம் என்கிறார்களே. இது சாத்தியமா?

காலின் அளவுகள் சீராக இல்லாதவர்களுக்கு சீராக்குவதற்காக பயன்படுத்தப்படும் சிகிச்சை தான் லிம்ப்லென்த்னிங். ஏதேனும் ஒரு காரணத்தினால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்குமேயானால், அந்த எலும்புகளின் வளர்ச்சியை இந்த நவீன சிகிச்சையின் மூலம் சாத்தியமாக்கலாம். “லீசிஜேறோ” முறைப்படி இது மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் மருத்துவமனையில் ஈராக் நாட்டைச் சேர்ந்த குள்ளமான சிறுமி ஒருவருக்கு கை, கால் உள்ளிட்ட அனைத்து எலும்புகளின் வளர்ச்சியையும் லிம்ப் லென்த்னிங் முறையில் அறு அங்குலம் வளரச் செய்தோம். இதனால் அவரின் உயரத்தை பதினைந்து சதம் உயர்த்தி காட்டினோம்.

மூட்டு வலியே வராமல் இருப்பதற்காக எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்?

நடை பயிற்சி, நீச்சல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை கட்டாயமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தசை கள் இறுக்கமடைந்து, மூட்டுகள் பாதுக்காக்கப்படும். உயரத்திற்கேற்ற எடையை தொடர்ந்து கண்காணித்து, அதனை மிகாமல் பாதுகாக்கவேண்டும். ஆனால் ரூமாடீஸ் ஓர்த்தரைடீஸ் வந்துவிட்டால் மருத்துவரை நாடி தான் தீர்வு காணவேண்டும்.

எலும்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நாள்பட்டதாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய எலும்பு மருத்துவத்துறையில் பல நவீன சாதனங்களும், தொழில நுட்பங்களும் வந்துவிட்டன. இதனால் எலும்பு மருத்துவத்திற்கு சிகிச்சை பெறுவது எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாவித்துவார சத்திர சிகிச்சையின் மூலம் எலும்பு தொடர்பான பாதிப்புகளை விரைவில் குணப்படுத்தி, நோயாளியை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்க இயலுகிறது.