இதய அடைப்பை நீக்க நவீன ஆஞ்சியோகிராம்

  • Dr.Kesavamoorthy
  • Nov 30, 1999
Appointment                Doctor Opinion          
 
இதய அடைப்பை நீக்க நவீன ஆஞ்சியோகிராம்

சென்னை குளோபல் மருத்துவமனையின் இதயநோயியல் நிபுணரான டாக்டர் கேசவமூர்த்தியை medicalonline-க்காகச் சந்தித்தோம்.

இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளது என்பதனை எம்மாதிரியான அறிகுறிகள் மூலம் உணரலாம்?

ஒவ்வொருவரின் நெஞ்சுக்கூட்டிற்குள் கையளவு அகலமுள்ளது இதயம். இதன் மூலமாகத்தான் உடல் முழுவதிற்கும் இரத்தம் செலுத்தப்படுகிறது. இந்த இதயத்திற்கு மூன்று கொரனேரி இரத்த குழாய்கள் மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. இந்த குழாய்களில் கொழுப்பு படிவதால், அப்பகுதியில் உள்ள இரத்த குழாய், அதன் அளவில் தடித்துவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சமச்சீரற்றதாகிவிடுகிறது. ஒரு தருணத்தில் இப்பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. இதனையே மாரடைப்பு என்று குறிப்பிடுகிறோம். இந்த மாரடைப்பு ஏற்பட்டு ஆறு மாத காலத்திற்குள் அப்பகுதியில் உள்ள இரத்த குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லையெனில், அப்பகுதியில் உள்ள இரத்த குழாய்கள் நிரந்தரமாக சிதைவடைந்து, மரணத்திற்கு வழிவகுக்கும். எனவே மாரடைப்பு வந்தவுடன் சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதே நல்லது.

நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அதிகமாக வியர்க்கும். படபடப்பு ஏற்படும். மூச்சடைப்பு நிகழலாம். கழுத்துப்பகுதியில் இறுக்கி பிடிப்பது போன்ற வலி ஏற்படும். உதாரணமாக சொல்லவேண்டும் எனில், ஒரு யானை எம்முடைய நெஞ்சின் மீதேறி நின்றால் எத்தகைய வலியை உணர்வோமோ அந்தளவிற்கு நெஞ்சில் சுமையான உணர்வு தோன்றும். ஒரு சிலருக்கு இதில் எந்தவித அறிகுறியுமில்லாமல் வருவதற்குரிய வாய்ப்பு உண்டு. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அறிகுறிகளை தோற்றுவிக்கும் நரம்புகளின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதால், அவர்களுக்கு வலியேயில்லாமல் கூட மாரடைப்பு தோன்றும்.

மேலும் ஒரு சிலர் தங்களுக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருப்பவர்களுக்கு, நெஞ்சில் சிறிய அளவில் வலி தோன்றியவுடன், மருத்துவர் பரிந்துரைத்திருக்கும் மாத்திரையொன்றை நாவின் அடியில் வைத்துக்கொண்டால் வலி நின்றுவிடும். மாத்திரையை வைத்தும் வலி குறையவில்லை என்றால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.

நெஞ்சில் தோன்றும் இத்தகைய வலியின் கால அளவு, குறைந்தபட்சம் பத்து நிமிடத்திலிருந்து அதிக பட்சம் இருபது நிமிடம் வரை நீடிக்கும். அதனையும் கடந்து வலி நீடிக்குமேயானால் அவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம்.

மாற்று இதயம் பொருத்தப்பட்ட ஒரு பெண்மணி, குழந்தையை பெற்றுக்கொண்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டோம். இது சாத்தியமா?

சென்னை போன்ற பெரு நகரங்களில் மேற்கொள்ளப்படும் இதய மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் எங்கள் மருத்துவமனையில் நூறு சத வெற்றியை தொடர்ந்து வழங்கிவருகிறோம். இருந்தாலும், ஒருவரின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்துவதால், பொருத்தப்பட்ட மாற்று இதயத்தின் செயல்பாட்டினை தடை செய்வதற்காக உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி பணியாற்றும். அதனை கட்டுப்படுத்துவதற்காகவும், பொருத்தப்பட்ட இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதற்காகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் போது, அவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்ள இயலுமா? என கேட்பது சற்று சிக்கலான வினா. விதிவிலக்காக ஒரு சிலருக்கு சாத்தியமாகுமேத் தவிர அனைவருக்கும் இது சாத்தியமாகும் என்று கூற இயலாது.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு போதும் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்களே.. ஏன்?

மருத்துவர்களின் பரிசோதனையின் படி இதய துடிப்பின் வேகம் 40 சதத்திற்கு மேல் உள்ளவர்களும், ஏழு நிமிடம் வரையிலான இயல்பிற்கு மீறிய இதய துடிப்பினை பராமரிப்பவர்களும்  தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மற்றவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மருத்துவர்களின் எச்சரிக்கையை மனதில் வைத்துக்கொண்டு தான் ஈடுபடவேண்டும். ஆனால் அதே தருணத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் வயாக்ரா என்னும் மாத்திரையை பயன்படுத்த கூடாது.

இதய நோயால் பாதிக்கப்பட்டு, பேஸ்மேக்கர் கருவியை பொருத்திக்கொண்டவர்கள், தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்களே ஏன்?

இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகத்தான் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திக்கொண்டவர்கள், ஓட்டப்பயிற்சிக் கூட எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் நவீன பேஸ்மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டு, பொருத்தப்படுகிறது. எனவே இந்த கருவியால் இயல்பான வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் அதிக மின்னழுத்த சேகரிப்பான் ( 440 வோல்ட் ட்ரான்ஸ்பார்மர்) இருக்குமிடத்திலும், விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த இலத்திரனியல் பரிசோதனை சாவடிகளிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகளைப் பற்றி..?


முன்பெல்லாம் இதய அடைப்பை கண்டறிய பல வழிகளை கையாளப்பட்டது. ஆனால் தற்போது கைகளாலேயே ஆஞ்சியோகிராம் செய்து, இதய அடைப்பினை, இனம் கண்டறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி அதிக வசதியைப் பெறுகிறார். படுக்கையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பாட்டுக்கேட்டுக் கொண்டே ஆஞ்சியோ செய்துவிடலாம். அனஸ்தீசியா தேவையில்லை. காலையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டால், மாலையில் பரிசோதனை செய்துக்கொண்டு, முடிவினை தெரிந்துக்கொண்டு திரும்பலாம்.

இதய அடைப்பை சரிசெய்ய இ.இ.சி.பி என்னும் மாற்று சிகி ச்சை முறையை பின்பற்றலாமா?


நம் வீட்டுக் குழாய் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. அதனை அகற்றுவீர்களா அல்லது அதனை விட சக்தி வாய்ந்த பம்ப் ஒன்றினை அமைத்து, அதன் மூலம் தண்ணீரை பாய்ச்சி, அடைப்பை சரி செய்வீர்களா... இதில் எது சரி யென்பதை விட, முதலில் இந்த சிகிச்சையப் பற்றி புரிந்துகொள்ளுங்கள். இம்முறையில் இரத்த குழாயில் எற்படும் அடைப்பை, மற்றொரு குழாய் மூலம் ஒரு மருந்தினை வேகமாக செலுத்தி, அடைப்பை அகற்றுவது. இம்முறை மருத்துவ அறிவியலுக்கு உகந்ததல்ல. அனைவருக்கும் பொதுவானதுமல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. அதாவது பைபாஸ் சர்ஜரி செய்ய முடியாதவர்களுக்கும், பைபாஸ் சர்ஜரி ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும், பைபாஸ் செய்தும் அடைப்பு உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் படி நாங்களே பரிந்துரைக்கிறோம்.

இதய நோய் தொடர்பாக ஆணிற்கும், பெண்ணிற்கும் வேறுபாடு உள்ளதாமே- இதன் மருத்துவ காரணங்கள் என்ன?


பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயால் அதாவது ஈஸ்ட்ரோஜன் என்னும் சுரப்பியால் இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்படாத வகையில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால் அவர்களுக்கும் இதய நோய் ஆண்களை போலவே தோன்றும். ஆனால் தற்போதுள்ள இளம் தலைமுறை பெண்கள் கொலஸ்ட்ரால் அதிகமுள்ள உணவை உண்பதாலும், உடற்பயிற்சியில்லாததாலும், பெண்களும் புகைப்பிடிப்பதாலும் இளம்வயதிலேயே இதய கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.

பன்னிரண்டு வயதிற்குட்ட குழந்தைகளுக்கு எம்மாதிரியான இதய கோளாறுகள் ஏற்படும்?

பிறக்கும் போதே இதயப்பகுதிகளில் இருக்கும் ஓட்டைகள் அதாவது வால்வு பிளாக்குகள் என்ற பிரச்சினை ஏற்படும். இதனைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசியப்பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரம் முழுமையாக மேம்படாததால், மாசடைந்த காற்றின் மூலம் குழந்தைகளுக்கு ரூமாட்டீக் ஹார்ட் டிஸீஸ் என்ற நோய் ஏற்படுகிறது. அதாவது தொண்டை பகுதியில் காற்றின் வழியாக ஒரு வகையான பாக்ட்ரீயாக்கள் உள்ளே சென்றுவிடும். இது இதயத்தின் இரத்த குழாய்களை பாதிக்கும் திறன் கொண்டவை. முதலில் ரூமாட்டீக் காய்ச்சல் வரும். எல்லா மூட்டும் வீங்கி இருக்கும். தொண்டை பகுதி இயல்பிற்கு மாறாக இருக்கும். இந்த காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்று நீங்கள் சிகிச்சை எடுத்தாலும் சரி எடுக்காவிட்டாலும் சரி பதினைந்து தினங்களில் குணமாகிவிடும். ஆனால் அந்த தருணத்தில் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அன்றிலிருந்து ஒரு ஆறு மாத காலத்திற்கு அதன் பாதிப்பு வெளியே தெரியாது. எனவே ரூமாட்டீக் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்கும்போது இதயத்தினையும் பரிசோதிப்பது நல்லது. ரூமாட்டீக் காய்ச்சலுக்கு பாதிப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் உடல் திறனைப் பொறுத்து, மருத்துவர்கள் ஐந்து வயது முதல் முப்பது வயது வரை சீரான இடைவெளியில் தடுப்பூசியினை போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். இதனை மறுப்பேதும் சொல்லாமல் பின்பற்றவேண்டும்.

தங்களின் மருத்துவ சாதனையாக எதனை கருதுகிறீர்கள்?

நோயாளிகளின் பூரண குணமே எங்களின் திருப்தி. அமெரிக்காவில் தற்போது பை பாஸ் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. காரணம் கைக ளால் ஆஞ்சியோகிராம் செய்யும் கருவியின் கண்டுபிடிப்பு. இந்த கருவியினை வைத்து, நான் ஒரு நாளில் நோயாளியை காலையில் பரிசோதித்து, மாலையில் இயல்பு நிலைக்கு திரும்ப வைத்து, வீட்டிற்கு அனுப்பியதை கூறலாம். இந்த சாதனைக்கு பின்னால் மருத்துவர்களின் திறமையை விட பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையினரின் ஒத்து ழைப் பும் உண்டு என்பதை குறிப்பிடவிரும்புகிறேன். மாயமாகும் சென்ட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், இரத்த குழாய் அடைப்பை நீக்குவது மேலும் எளிதாகிவிடும்.

தற்போது உணவு நிலையில் தன்னிறைவு கண்டு வருகிறோம். இதனால் உடலுழைப்பு குறைந்துவிட்டது. வாழ்க்கை முறையையும் மாற்றியமைத்துக்கொண்டோம். தமிழர்களின் சங்க கால இலக்கியங்களில் எண்ணெய்யும், வறுத்தல் என்ற விடயமும் இல்லை. எனவே தமிழர்களின் உணவு முறையை அறிந்து அதனை பின்பற்றி ஆரோக்கியமாக இருப்பது தான் புத்திசாலிதனம்.

தொடர்புக்கு: 0091 96770 26959