பல்வலி தான் இதயநோய்கள் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி

  • Dr.Sanjay Rajan
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
பல்வலி தான் இதயநோய்கள் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி

ஒரு புன்னகை,  போரை தவிர்த்து விடும் சக்தி படைத்தது" என்ற பழமொழியில் பொதிந்து கிடப்பது,  அதில் தெரியும் பற்களுக்கும் சேர்த்து தான். பற்களைப் பற்றியும், அதை பராமரிப்பது பற்றியும் பல் மருத்துவத்தில் குறிப்பாக பொருத்துல் மற்றும் சீரமைத்தலில் நிபுணத்துவம் பெற்றவரும், சென்னையில் இயங்கிவரும் ஆர். ஆர். பல் மருத்துவமனையின் இயக்குநருமான டொக்டர் சஞ்சய் ராஜன் www.medicalonline.in க்கு அளித்த விளக்கங்கள்.

இந்த துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

எவரும்  பல் மருத்துவத் துறையை விரும்பி தேர்ந்தெடுப் பதில்லை. பொது மருத்துவம் பயில வாய்ப்பு இல்லாதவர்கள் தான் பல் மருத்துவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் இளங்கலை, முதுகலை, சிறப்பு நிபுணத்துவம்  ஆகிய மூன்று நிலைகளை கடந்தால் தான்  சிறந்த மருத்துவராக பிரகாசிக்கமுடியும். பல் மருத்துவத்தை ஒருவர் விரும்பி தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர்களது பெற்றோர்கள் யாரேனும் அந்த துறையில் சிறந்து விளங்கு பவராக இருப்பார்கள். என்னை பொறுத்தவரை பல் மருத்துவ துறையை விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் பயில தொடங்கியதும்,  இதில் சிறப்பாக வரவேண்டும்என்ற எண்ணம் இருந்தது.

பல் மருத்துவத்தில் சிறப்பு நிபுணத்துவப் பிரிவாக இருக்கும் ஏழில் தாங்கள் தெரிவு செய்த  பிரிவு எது?


பல் பொருத்துதல் மற்றும் சீரமைத்தல். அதாவது வாயில் ஒரு இடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பற்கள் அகற்றப் பட்டிருந்தால், பற்வரிசை சீரற்றதாகிவிடும். இதனால் மற்ற பற்களின் உறுதி கேள்விக் குறியாகிவிடும். இந்நிலையில் பற்கள் விழுந்த இடத்தில் நோயாளியின் முழு ஒத்துழைப்புடன் மீண்டும் பல்லை செயற்கையாக பொருத்தி சீரமைப்பது தான் இதன் சிறப்பம்சம்.

விபத்து அல்லது புற்றுநோய் ஏற்பட்டு கண்பார்வை இழந்தவர்களுக்கு, பார்வை தருவதற்காக கண்ணில் பல்லை பொருத்துகிறார்களே, இதற்கு பயன்படும் பல் எது? எப்படி?

இதற்கும்,  பல் சிகிச்சை அளிப்பவர் களுக்கும் தொடர்பில்லை. அவர்கள் பற்களின் மூலக்கூறு திசுவை எடுத்து, வளர்த்து அதை கண்ணில் பொருத்துவார் கள். இன்னும் சிலர் செயற்கையான பல்லை உருவாக்கியும்  பயன்படுத்துகிறாாகள்.

ஒருவருக்கு பல்வலி ஏற்பட்டு அதனால் உயிரிழப்பு ஏற்பட சாத்திய கூறு உண்டா?


மிகக் மிக குறைவு. கவன குறைவான சிகிச்சை மற்றும் கவனிக்காத பல்வலி ஆகியவற்றினால் இவை ஏற்பட வாய்ப் புண்டு. தற்போது கையாளப்பட்டு வரும் நவீன மருத்துவத்தில் இதற்கு சரியான தீர்வு உண்டு. அதனால் மரணங்கள் ஏற்படாது என்று கூறலாம்.

பல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படும் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை பற்றி சற்று விளக்குங்களேன்?

பொதுவாக மயக்க மருந்துகள் இரண்டு வகைப்படும். ஜெனரல் அனத்தீஸ்யா மற்றும் லோக்கல் அனத்தீஸ்யா. இதில் பல் தொடர்பான சிகிச்சையின்போது பயன் படுத்தப்படுவது லோக்கல் அனத்தீஸ்யா. இதனால் சிகிச்சை முடிந்து,  குறிப்பிட்ட நேரம் வரை நோயாளிகளுக்கு பல் மற்றும் அதன் தொடர்பான செயல்பாடுகளில் ஒரு வித மரத்துப் போன தன்மை இருக்கும். இதனால்  எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.

கடைவாய் பற்களில்  எந்த பிரச்சினை வந்தாலும் அதனை அகற்றக்கூடாது என்றும், இதனால் மூளை மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்படும் என்று மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கையில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?

இதில் துளி கூட உண்மையில்லை. இது ஒரு மூட நம்பிக்கை மட்டுமே. மேலும் இதுவரை இப்படி ஒரு விடயத்தை  அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. பற்களில் பிரச்சினை வரும்போது கவனிக்கவேண்டும். அதை கவனிக்கவிட் டால் சீழ் பிடித்து,  தாடை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சூழல் கூட  உருவாகலாம். அதைவிட இன்று இதயநோயால் பாதிக்கப்பட்டவர் கள், மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், தோல் நோயால் சிரமப்படுபவர்கள் என்று எல்லோருமே முதலில் பல்லில் ஏற்படும்  சிறிய பிரச்சினைகளை அலட்சியப்படுத் தியவர்கள் அல்லது பல் வலி ஏற்பட்டதும் முறையாக சிகிச்சை பெறாதவர்கள் என்று சொல்லலாம். அதாவது பல்வலி தான் இதயம் தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முதல் அறிகுறி. எனவே நம்பிக்கைகளில் கவனம் செலுத்தாமல் பல்வலி வந்த பிறகாவது பல் மருத்துவரை அவசியம் சந்தித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

மேற்கத்தேய நாடுகளில் பற்கள் பளிச்சென்று இருக்க ஒரு வித வேதியல் திரவத்தை பயன்படுத்துகிறார்களே இது ஆரோக்கியமானதுதானா?

இயற்கையாகவே நமது பற்கள் சற்று மஞ்சள் வண்ணம் கலந்ததாக தானிருக்கும். டென்ட்டின் என்பது மஞ்சள் நிறம் கொண்டது. அதன் ஒளிரும் தன்மைதான்  எனாமலில் பிரதிபலிக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ளவர்களின் இயல்பு. இதனை வெண்மையாக தெரிய செய்வதற் காக தற்போது ஓயிட்னிங், பிளிச்சீங் என்ற நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. இது தற்காலிகமாகத்தான் வெண்மையைத் தரும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவது  ஆரோக்கியகேட்டை விளைவிக்கும்.

பல்வலி ஏற்பட்டால் நமது மக்கள் உடனே கிராம்புவை பயன்படுத்துங்கள் என்கிறார்களே, இதனால் பலன் உண்டா?

கிராம்புவை பயன்படுத்துவது தற்காலிக தீர்வை தருமே தவிர நிரந்தர தீர்வை ஒரு பல் மருத்துவரால் தான் அளிக்கமுடியும். பல்வலியின் தன்மை தெரியாமல் , அதை குறைப்பதற்காக மற்றவர்கள் கூறும் மருத்துவ ஆலோசனைகளை தயவுசெய்து காது கொடுத்து கேட்காதீர்கள். இதனால் நோயாளிக்குக்கு தான் கூடுதல் வலி மற்றும் வேதனை.

பற்களை எளிய முறையில் எப்படி பராமரிப்பது?

சாக்லேட், இனிப்புவகைகள் உள்ளிட் டவைகளை  உண்டபின் வாயை கொப்ப ளிப்பது. நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உண்பது. கண்ணாடியை பார்த்து, முறைப்படி பல்லை பிரஷ்ஷால் தேய்ப்பது, மாதம் ஒரு முறை பல் தேய்க்கும் பிரஷ்ஷை மாற்றுவது, வருடத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது, இதனை கடைபிடித்தால் போதுமானது.

பல்லை பாதுகாப்பதில் எதற்கு அதிக பங்கிருக்கிறது பற்பசைக்கா? பல் பொடிக்கா?

பல் பொடிகளை விட பற்பசைகளே சிறந்தது. ஏனெனில் பல்லிற்கும், பிரெஷ் ஷிற்கும் இடையே ஒரு உராய்வை ஏந்படுத்தி பல்லை பாதுகாப்பதில் பற்பசைகளின் பங்கு அதிகம். அதிலும் அதிக நுரை வரும் பற்பசைகளே பல்லை பாதுகாப்பதில் சிறந்து விளங்குகிறது.

சில இடங்களில் கிடைக்கும் குடிநீர் ஆதாரங்களில்,  புளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் எந்த அளவிற்கு பாதிப்படுகிறது?

அவர்கள் தங்கள் பற்களை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அவர்களுடைய பற்களுக்கு  சக்தி குறைவாக இருக்கும். அதனால் நார்சத்து உள்ள உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடவேண்டும். புளோரைடு பற்களுக்கு ஆராக்கியம் அளித்தாலும் அதன் அளவு மிகச்சிறியது.

பிறக்கபோகும் குழந்தையின் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக எம்மாதிரியான முன் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்?

கர்ப்ப காலத்தின் போது உடல் நல குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்ப காலத்தின் போது உடல்நலம் பாதித்தவர்களின் குழந்தைகளுக்கு பற்கள் ஆராக்கியமான முறையில் வளருவதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் கர்ப்ப காலத்தில் போது `டெட்ராசைக்ளின்\' என்ற மருந்தை உட்கொள்ளவே கூடாது. இதனால் குழந்தைகளின் பற்கள் சீரற்ற முறையில் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்குவதற்கு முன் அதிக அளவிலான கால்சியம் சத்துள்ள உணவை உட்கொள்ளலாம்.

தொடர்புக்கு: 0091 44 24733415