சர்க்கரையால் பாதிக்கப்படும் இதயம்

  • Dr.P.V.Balamurugan
  • Sep 30, 2022
Appointment                Doctor Opinion          
 
சர்க்கரையால் பாதிக்கப்படும் இதயம்

நீரிழிவு நோய் - அதாவது, சர்க்கரை நோய் பாதிப்பு நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், சர்க்கரை நோயும் இருதய பாதிப்பும் உற்ற நண்பர்கள். இதை, நீரிழிவு நோயாளர்கள் அறிந்திருப்பது அவசியம்!

Youtube Video - https://youtu.be/Wkyz2CERisA

நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது இரத்த நாளங்கள். இவற்றில் கொழுப்பு படிமங்கள் ஏற்பட்டு, இரத்த ஓட்டம் தடைப்பட ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக, ‘கொரனரி’ என்று மருத்துவத் துறையில் குறிப்பிடப்படும் இதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், வெளிநாடுகளைப் போல் அல்லாமல், நம் நாட்டில், மிக இளம் வயதிலேயே நீரிழிவு மற்றும் அதனூடான இருதய பாதிப்புகளுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகம். வெளிநாடுகளில் சுமார் ஐம்பது வயதில் நீரிழிவு எட்டிப்பார்க்கும். ஆனால் நம் நாட்டிலோ, 35 வயதிலேயே நீரிழிவு நோயாளர்கள் ஆகிவிடுவார்கள். அதுபோலவே, நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, அதன் மூலம் இருதய பாதிப்புகளுக்கு ஆளாகுபவர்களும் அதிகம். இது, நீரிழிவு நோயால் இருதயத்துக்கு ஏற்படக்கூடிய மறைமுகமான பாதிப்புகள்!

இது தவிர, நீரிழிவு நோயால் நரம்புகள் பாதிக்கப்படும். அதிலும், இருதயத்துக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு ‘கார்டியோ மயோபதி’ எனும் இருதய சிக்கல்களும் உண்டாகின்றன. இப்படி, சர்க்கரை நோயால் பல்வேறு வகைகளில் இதயத்துக்குப் பாதிப்புகள் ஏற்படும்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் இருதய பாதிப்புகளின் அறிகுறிகள், பொதுவான இருதய நோய்களுக்கான அறிகுறிகளில் இருந்து வித்தியாசப்படுவதுதான். உதாரணமாக, சாதாரணமானவர்களுக்கு இருதய அடைப்பு ஏற்படும்போது, படபடப்பு, நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் - அதிலும் வயதான பெண்களுக்கு - இதுபோன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் சத்தமே இல்லாமல் இதய அடைப்பு ஏற்படலாம்.

நீரிழிவு நோயாளியின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை செய்வதும் சிரமமாகிறது. ‘ஸ்டென்ட்’ போன்ற விஷயங்களையெல்லாம் நீரிழிவு நோயாளிகள் நினைத்துப் பார்க்கவும் முடியாது. அப்படியே பொருத்த முடிந்தால்கூட, மீண்டும் அடைப்புகள் சீக்கிரமாகவே உருவாகி விடலாம்.

எனவே, இரத்தத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் என்பனவற்றைக் குறைத்துக்கொள்வதுதான். அதிலும் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படாத உடற்பயிற்சிகளைச் செய்து உடல் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். தத்தமது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

டாக்டர் பாலமுருகன்
நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர்