கண் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்

  • Dr.Badri Narayanan
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
கண் பராமரிப்பு  குறித்த விழிப்புணர்வு அவசியம்

"இன்றைய மாணவர்கள் செல்போன் ஐபேட், டொப்லெட் போன்றவற்றை பயன்படுத்துவதை இனி தடுக்க இயலாது.

ஆனால் அதனை பயன்படுத்தும் போது போதிய டிஸ்டென்ஸ் இருக்கவேண்டும். டூமச் காண்ட்ராஸ்ட் இருக்கக்கூடாது. டூமச் ப்ரைட்னஸ் இருக்கக்கூடாது. என்று எடுத்துரைக்கலாம். அத்துடன் ரேடி யேசனால் பார்வை பாதிக்கப்படுவது மிகக்குறைவே. ஆனால் இவர்கள் வீடியோ கேம்ஸ் அல்லது செல்போனில் கேம்ஸ் ஆடும் போது தங்களை மறப்பது மட்டுமல்லாமல் கண்களை இமைக்கவும் மறந்துவிடுகிறார்கள். இதனால் கண் இமைகள், கண்களை போதிய ஈரபதத்தில் பராமரிப்பதற்கு தடை ஏற்படுகிறது. இதனால் கண்கள் வறண்டுபோவதற்கு காரணமாகிவிடுகிறது. இதனை தவிர்க்கவேண்டும்.

அதாவது அவர்களை எமோஷனலாக விளையாட அனுமதிக்காமல் இயல்பாக விளையாடுவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். கண்களை போதிய இடைவெளிவிட்டு இமைக்க வேண்டும் என்று எச்சரிக்கவேண்டும்.” என்ற எச்சரிக்கையுடன் இயல்பாக பேசத் தொடங்குகிறார் Dr. பத்ரி நாராயணன். இவர் மதுரையில் செயல்பட்டு வரும் அகர்வால் கண் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் இன்றைய தேதியில் கண் பார்வை பராமரிப்பு மற்றும் பாதிப்புக்குரிய நவின சிகிச்சை குறித்து சில விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

கண் புரை (கேட்டராக்ட்) குறித்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? அதற்கான நிவாரணம்?

கண்ணில் புரை விழுவது என்பது முதுமையடைவதன் காரணமாகவே பெரும்பாலனவர்களுக்கு ஏற்படுகிறது. சன்லைட் எக்ஸ்போஷர் அதாவது சூரிய ஒளியில் அதிக நேரம் பார்ப்பதோ அல்லது அதில் அதிக நேரம் பணியாற்றினாலோ அவர்களுக்கு இந்த கண் புரை எளிதில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோல் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகிய இவர்களுக்கு இந்த பாதிப்பு விரைவில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற எந்த பாதிப்பு இல்லையென்றாலும் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் கண் புரை வந்தே தீரும் என்பது தான் முக்கியமானது. அதேப்போல் இதனை வராமல் தடுக்க இயலாது. அதற்கான மருந்துகளோ அல்லது மருத்துவ முறைகளோ இது வரை கண்டறியப்படவில்லை. கண் புரை வரும் அதனை மருத்துவர்களிடம் காண்பித்து அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ள காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பை தள்ளிப்போடலாம்.

ஆனால் கண் புரை முற்றிலும் குணப்படுத்தக்கூடியவை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு சில ருக்கு அபூர்வமாக மரபணு குறை பாடுகளினாலும், கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் அதிக உஷ்ணத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கண் புரை வருவதற்கான வாய்ப்புண்டு. மேலும் ஒரு சிலருக்கு ரேடியேசன் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

டயபடிக் ரெட்டினோபதியின் தீவிரம் குறித்து சொல்லுங்களேன்?

சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகரித்தால், விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு பார்வையிழப்பை ஏற்படுத்தும். மனிதனுக்கு மூளை எப்படி முக்கியமோ அதேப்போல் கண்ணிற்கு விழித்திரை முக்கியம். இன்னும் நுட்பமாக விளக்கவேண்டும் என்றால் மூளையின் நீட்சி விழித்திரை என்று குறிப்பிடலாம். அதே சமயத்தில் விழித்திரையும் பார்வை நரம்புகளும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்திருக்கின்றன. சர்க்கரையின் அளவு அதிகரித்தால் இந்த பார்வை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அங்கு இரத்த கசிவு தோன்றக்கூடும்.

கட்டுப்பாடில்லாத சர்க்கரை, இரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் பிரச்சினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விழித்திரை பாதிப்போ அல்லது பார்வை நரம்புகளில் பாதிப்போ ஏற்படக்கூடும். ஒருவர் 45 வயதில் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையை செய்து கொள்கிறார். அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது என்று சொன்னால் அவருக்கு இதற்கு முன்னாலேயே சர்க்கரை நோயின் பாதிப்பு இருந்திருக்கும். ஆனால் அவர் அதனை கண்டறியவில்லை.

இதனால் தற்போது மருத்துவர்கள் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆண்டுதோறும் சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை செய்திருந்து அவருக்கு 45 வயதில் சோதிக்கும் போது சர்க்கரையிருந்தால், அவருக்கு சர்க்கரையின் பாதிப்பு அப்போது தான் வந்திருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு அதற்கேற்ப கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்துவோம்.

விழித்திரையில் லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை, கண்ணுக்குள் படக் கூடிய ஊசியின் மூலமான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய வற்றால் குணப்படுத்த இயலும்.

கேரட் மீன் மற்றும் வைட்டமின் ஏ சத்துள்ள பொருள்களை இளம் பிராயத்திலிருந்தே சாப்பிடக் கொடுத்து வந்தால கண்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொல்கிறார்களே இதன் மருத்துவ பின்னணி என்ன?

விழித்திரையில் உள்ள ரொலாப்சின் என்றவற்றின் ஒரு பாகம் வைட்டமின் ஏ சத்துகளாலானது. அதனால் கண்களுக்கு வைட்டமின் ஏ சத்து அவசியம் தேவை. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் வைட்டமின் ஏ குறைபாட்டால் விழித்திரை அல்லது கரு விழி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படலாம். எனவே வைட்டமின் ஏ குறைபாடு மட்டுமே கண் பார்வைத் தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் காரணமல்ல. கடந்த ஆண்டுகளை விட தற்போது அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு அதிகரித்திருககிறது என்று அறுதியிட்டு கூற முடியும்.