மன நோயை குணப்படுத்தும் எலக்ட்ரோ கன்வல்சிங் தெரபி சிகிச்சை!

  • Dr.Ramanujam
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
மன நோயை குணப்படுத்தும் எலக்ட்ரோ கன்வல்சிங் தெரபி சிகிச்சை!

தற்போதைய வேகமான வாழ்க்கை நடைமுறையில் இளைய தலைமுறையினர் அதிகமானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக பணியாற்றும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட பணிகளை முடிக்கவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி, தங்களை மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் உட்படுத்துகிறார்கள்.

ஆனால் அதை குணப்படுத்திக்கொள்ளாமல், தங்களை களைப்பாறுதல் / ஓய்வு எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி மது அருந்துதல் மற்றும் தங்களுக்கு விருப்பமான பொழுது போக்குகளில் ஈடுபட்டு தங்களின் உடலையும் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். அத்துடன் இன்று, பலரும் இரண்டு வகையான மருத்துவர்களை சந்திப்பதற்கு மிகவும் தயங்குவர். ஒன்று மனநல மருத்துவர் மற்றொன்று பால்வினை நோய்களுக்கான மருத்துவர். தனி நபர் ஒழுக்கம் மற்றும் சமூக அமைதிக்கு தேவையான இவ்விரண்டு விஷயங்களிலும் இன்றைய இளைய தலைமுறையினர் போதிய அக்கறையுடன் செயல்படுவதில்லை. அவர்கள் இவ்விரண்டு மருத்துவர்களையும் சந்தித்து தேவையான அளவிற்கு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் இவர்கள் ஆரோக்கியமான மனநிலையுடன் உற்சாகமாக பணியாற்றுவதுடன் அடுத்த தலைமுறையினரையும் ஆரோக்கியமாக வைத்திருப்பார்கள். என்ற எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரையுடன் எங்களிடம் பேசத் தொடங்குகிறார் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியின் மன நலப் பிரிவின் தலைமை பேராசிரியரும், மன நல மருத்துவ நிபுணருமான டாக்டர். இராமானுஜம்.

* ஒருவருக்கு எம்மாதிரியான தருணங்களில் மன நலம் கெடுகிறது. அதற்கு எம்மாதிரியான சிகிச்சையை அளிக்கிறீர்கள்?

ஒருவருக்கு மன நோய் தனியாகவும் வரலாம், உடல் பாதிப்பினாலும் வரலாம். உதாரணமாக யாரேனும் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து, அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய பின் எங்களைப் போன்ற மனநல மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சைக்காக அனுப்புவார்கள். இதனை லயசன் சைக்ரியாட்ரீக் ட்ரீட்மெண்ட் என்போம். அதாவது ஏனைய மருத்துவ பிரிவுகளுடன் இணைந்து சிகிச்சையளிப்பது.

பிரசவத்தின் போது எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டாலோ அல்லது ஆரோக்கியமற்று பிறந்தாலோ அந்த குழந்தையை ஈன்றெடுத்த தாயையும், எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களையும், மது மற்றும் போதைக்கு அடிமையாகி சிகிச்சைப் பெறுபவர்களையும், ஆண்மைக்குறைவிற்காக சிகிச்சைப் பெறுபவர்களையும் என பல பிரிவுகளிலும் சிகிச்சைப் பெறுபவர்களை அறுவை சிகிச்சைக்கு பின்னரான காலங்களில் அவர்களுக்கு மன நல சிகிச்சை தேவைப்படுகிறது.

அதற்காக இவர்களை சந்தித்து அவர்களின் மன நல ஆரோக்கியத்திற்காக அதற்குரிய சிகிச்சையை அளிக்கிறோம். இதற்காகவே நம்பிக்கை என்ற பெயரில் புனர்வாழ்வு மையம் ஒன்றும் இந்த மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் இருக்கிறது, அதில் அனுமதித்து சேவையின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறோம்.

இவர்களுக்கு பெரும்பாலும் இரண்டு வார கால அளவிற்கான சிகிச்சை திட்டமொன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். யோகா, இசை, பயிற்சி, தியானம் என அவர்களின் மன நல ஆரோக்கியத்திற்காக சில விஷயங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். மூன்று மாதத்திற்கொரு முறையோ அல்லது ஆண்டிற்கு இரண்டு முறையோ அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் நடவடிக்கைக் குறித்து அவர்களிடம் பேசி, அவர்களை அறியாமலேயே அறிந்து கொள்கிறோம். ஏனெனில் பெரும்பாலான மது பிரியர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மீண்டும் மது அருந்திவிடுவார்கள். அவர்களை அதிலிருந்து மீட்க இது போன்ற கண்காணிப்பு உதவி புரியும்.

* யாருக்கு எல்க்ட்ரோ கன்வல்சிங் தெரபி என்ற மின் அதிர்வு சிகிச்சையளிப்பீர்கள்?

மன நோய்களில் யாருக்கு க்ரானிக்கலாக இருக்கிறதோ அவர்களுக்கு இந்த சிகிச்சை அளிப்பதுண்டு. அதாவது நோயாளியின் தலைப்பகுதிக்கு மின்சாரம் செலுத்தி அவர்களை குணப்படுத்துவது. இது மன நோய்க்கான சிகிச்சைகளில் முக்கியமான சிகிச்சை. சிலருக்கு மருந்து மாத்திரைகளை விட இம்மாதிரியான மின்சாரத்தை செலுத்துவதன மூலம் சிகிச்சை நன்கு பலனளிக்கும். இதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. மயக்க மருத்துவரின் உதவியுடன் தான் இவ்வித சிகிச்சையளிக்கப்படுகிறது.

அதாவது மயக்க மருத்துவர் நோயாளியின் உடல் நிலையை ஆராய்ந்து செயற்கை சுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கும் போது தான் நோயாளிக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகளில் இ இ ஜி எனப்படும் படச்சுருள் பதிவு பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் சிகிச்சையளிக்கும் கால அளவு தீர்மானிக் கப்படுவதுடன், குணமாகும் தருணங்களையும் கண்காணிக்க இயலும்.

* ஆக்குபேஷனல் தெரபி அளிக்கப்படுவதேன்?

நோயாளிகளை ஏதேனும் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் மனம் ஒரே நிலையில் இல்லாமல் வேறு வேறு செயல்பாடுகளில் மூழ்குகிறது. இதன் மூலம் அவர்களின் மன நலம் மேம்படத் தொடங்குகிறது.

உதாரணமாக மன நோய் தாக்கப்பட்டவர்களுக்கு கைவினைப் பொருள்களை உருவாக்கத் தெரியும் என்றால் நாங்கள் அதற்கான மூலப் பொருள்களை வாங்கி வைத்துவிடுவோம். அத்துடன் எங்களில் ஒருவரை அவர்களின் முன்னிலையில் கைவினைப் பொருள்களை செய்யத் தொடங்கினால், அதை பார்த்து அவர்களும் செய்ய முன்வருவார்கள். இதனை ஆக்குபேஷனல் தெரபி என்று குறிப்பிடுகிறோம். இதன் மூலமாக மன நலம் மேம்படக்கூடும்.

* இதற்கான சிகிச்சையை பெரும்பாலான மக்கள் எடுத்துக் கொள்வதில்லையே ஏன்?

முதலில் அவர்கள் தங்களுக்கு மன நோய் ஏற்பட்டிருக்கிறது என்றோ மன நலம் குன்றியிருக்கிறது என்றோ ஒப்புக் கொள்வதில்லை. அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் இது குறித்து தெளிவான விழிப்புணர்வைப் பெற்றிருப்பதில்லை.

அடுத்ததாக நகரப் புறங்களை விட கிராம புறங்களில் இத்தகைய மன நலம் குன்றியவர்களை மதத்துடன் தொடர்புபடுத்தும் போக்கே இன்று வரை காணப்படுகிறது.

அதே போல் வேறு சில கிராமப் புறங்களில் இது குறித்து தெரிந்திருந்தாலும் போக்குவரத் திற்கான தூரம் அதிகம் என்பதால் சிகிச்சையை எடுத்துக் கொள்வதில்லை. இதை களைவதற்கான நடவடிக்கையில் தற்போது ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

வரவிருக்கும் அடுத்தடுத்த இழல்களில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் மனநோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் மருத்துவர் கூறும் ஆலோசனைகளைக் காணலாம்.